"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" - நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; ந...
இந்திய பொருளாதாரத்துக்குக் காத்திருக்கும் சவால்கள்... முதலீட்டாளர்களே, நிதி முடிவுகளில் தேவை கவனம்!
இந்தியப் பொருளாதாரம் மீதும், இந்திய முதலீட்டுச் சந்தையின் மீதும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறினாலும், தொடர்ந்து அதிகரித்துவரும் உள்நாட்டு முதலீடுகளே அதற்குச் சான்று. காரணம், இந்தியப் பொருளாதாரம் சார்ந்து சொல்லப்படும் தகவல்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதே.
உச்சத்தில் உள்ள பங்குச் சந்தை, சிகரத்தைத் தொடும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, வலுவாக உள்ள நுகர்வு வளர்ச்சி, குறைவான வட்டி விகிதம், அதிகரிக்கும் கார் விற்பனை, வணிக வளாகங்களில் நிரம்பும் மக்கள் கூட்டம்... இவையெல்லாம் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக நம்மை உற்சாகப்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த உற்சாகத்துக்குப் பின்னால் சில கட்டமைப்பு ஆபத்துகள் மறைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமக்குச் சொல்லப்படுவதற்கும், நடைமுறை யதார்த்தத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இருக்கும் சில அபாயகரமான சவால்களை, முதலீட்டாளர்கள் அறிய வேண்டியது அவசியமாகிறது.
முதலாவது, அரசுக் கடன். ஐ.எம்.எஃப் கணக்குப்படி, இந்தியாவின் கடன் ஒட்டுமொத்த ஜிடிபியில் 80%-ஐ தாண்டியுள்ளது. மேலும், கடனுக்கான வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவை அரசு வருவாயின் 83%-ஐ எடுத்துக்கொள்கின்றன. வருவாய் ஆதாரங்களும் குறையத் தொடங்கியிருக்கின்றன. டிசம்பரில் நிகர ஜி.எஸ்.டி வசூல் வெறும் 2.2% வளர்ச்சியே கண்டிருக்கிறது. பல மாநிலங்களில் வருவாய்த் தேக்கம் தென்படுகிறது.
இப்படியாக கடன் அதிகரிப்பு, வருவாய் வளர்ச்சி குறைவு போன்றவை தொடர்ந்தால், அரசு மூலதனச் செலவினங்களைக் (Capex) குறைக்கும். சமீப ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்ததும், காப்பாற்றியதும் அரசு செலவினங்கள்தான். அது குறைக்கப்பட்டால், நாட்டின் ஜிடிபி வளர்ச்சியே பாதிக்கப்படும். இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் தேர்தல் அறிவிப்புகள் பலவும் செலவுகளையும், கடன்களையும் மேலும் உயர்த்தும் அபாயமும் உள்ளது.
இரண்டாவது நெருக்கடி, குடும்பச் சேமிப்புகளின் வீழ்ச்சி. இந்தியாவின் பலமே குடும்பச் சேமிப்புகள்தான். ஆனால், அது ஜிடிபியில் 10%-லிருந்து 7%-ஆகக் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பும், ஊதியங்களும் தேங்கியிருப்பதே இதற்குக் காரணம். மூன்றாவது, சர்வதேச அரசியல் சூழல்களால் ஏற்படும் அபாயங்கள். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி நடவடிக்கைகளால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சியே கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
இப்படியாக, நாட்டின் பொருளாதாரத்திலும், முதலீட்டுச் சந்தையிலும் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்த பல காரணிகள் தயாராக இருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, நாட்டின் வளர்ச்சி குறித்த கருத்துகள், தங்கம், வெள்ளி பற்றிய தகவல்களை அப்படியே நம்பக்கூடாது. ‘அஸெட் அலொகேஷன்’ உத்தி மூலம், நீண்டகால இலக்குடன் திட்டமிடுவதே, நம் பணத்துக்குப் பாதுகாப்பு.
முதலீட்டு முடிவுகளை... ஆராய்ந்து எடுப்போம்!
- ஆசிரியர்














