செய்திகள் :

கம்பம் நந்தகோபாலன் கோயில்: களைகட்டும் மாட்டுப்பொங்கல்... 400 ஆண்டுப் பாரம்பர்யம்!

post image

தேனி மாவட்ட மக்களுக்கு மாட்டுப் பொங்கல் என்றால் சட்டென நினைவிற்கு வருவது கம்பம் நந்த கோபாலன் கோயிலும், அதன் பட்டத்துக் காளையும் தான். வருடா வருடம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி ஆண்டுதோறும் கோயிலின் பட்டத்துக்காளைக்கு அலங்காரம் செய்து படையலிட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வாருங்கள் இந்தப் பாரம்பர்யத்தின் வரலாற்றை அறிந்துகொள்வோம்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயில் மாட்டுத் தொழுவத்தில் எண்ணற்ற மாடுகள் உள்ளன. அவற்றுக்குத் தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளையே. அதனைத் தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாகத் தேர்வு செய்யப்படும்.

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில்

'தேவர்+ ஆவலு' என்பதே தேவராவலு என்றானது. ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கும். 'தேவராவலு' என்றால் 'தேவர்களின் பசு' என்று பொருள். அந்த வகைப் பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவற்றை அடையாளம் காண, தானமாகக் கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவற்றின் கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள்.

17-ம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையின் பூர்வீக குடிகள் படையெடுப்பு காரணமாக, தங்களின் விவசாய நிலங்கள், வீடுகளை இழந்து, கால்நடைகளை மட்டும் அழைத்துக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக இடம் பெயர்ந்தனர். கம்பம் பகுதிக்கு வந்தபோது, அங்கு ஆட்சியில் இருந்த மன்னனிடம் சென்று, தங்களுக்கு விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் வாழ்வாதாரங்களை உருவாக்கித்தரும்படி கேட்டிருக்கிறார்கள்.

அப்போது மன்னன், ‘இங்கு எம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். உங்களின் கால் நடைகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் வந்து விடக்கூடாது’ என்று கூறியதோடு, மாடுகளின், தன்மையை அறிய ஒரு சோதனையும் நடத்த விரும்பினார். அதாவது, தோகையுடன் கரும்பை நட்டு வைத்து, அதன் முன்பு தானியங்களை குவித்து, தானியங்கள் சிதறாமல் கரும்பை மாடுகள் சாப்பிட வேண்டும் என்று கூறினார்.

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில்

மக்களும் தங்களின் கால்நடைகளை வேண்டி நின்றனர். அப்போது ஒரு காளை தனது கால்களை மற்றொரு காளையின் மேல் வைத்து நின்ற நிலையில் கரும்புத் தோகையைத் தின்றதாம். அதனால் தானியம் எதுவும் சிதறவில்லை. இதைப் பார்த்த மன்னன் வியந்து, அவர்கள் விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும் நிலம் கொடுத்தார்.

மன்னரை வியக்கவைத்த அந்த காளையைப் பட்டத்துக் காளையாக மக்கள் போற்றியிருக்கிறார்கள். மேய்ச்சலுக்குச் செல்லும்போது முதல் காளையாக அந்தக் காளை சென்றதோடு, மற்ற காளைகளையும் வழி நடத்திச் சென்றிருக்கிறது. இப்படித்தான் பட்டத்துக்காளை பாரம்பரியம் தோன்றியது.

பட்டத்து காளை இறந்து விட்டால் கம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். காளை இறந்த நாளில் இருந்து புதிய பட்டத்து காளை தேர்வு செய்யும்வரை அந்தக் கோயில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். காளை இறந்த மூன்று நாள்களுக்கு ஊரில் துக்கம் கடைபிடிக்கப்படும். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தால், தவிர்க்க முடியாத சூழலில் வெளியூருக்குச் சென்று திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வார்கள்.

பட்டத்துக்காளையைப் பராமரிக்க நான்கு பேரைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களை ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பட்டத்துக் காளை இறந்தால் காரியம் செய்வதும், புதிய காளையைத் தேர்வு செய்து மரியாதை செலுத்துவதும் இந்தக் கடவுளின் பிள்ளைகளின் கடமை.

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலன் கோயில்

இந்த பதவிக்கு வந்து விட்டால், அவர்கள் எந்த துக்க நிகழ்வுக்கும் செல்ல மாட்டார்கள். தங்களின் தாய், தந்தை, மகன் உள்பட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்கூட அவர்களின் உடலைப் பார்க்கக்கூடாது. குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர்களுக்கான இறுதிக்காரியங்களையும் செய்யமாட்டார்கள்.

பட்டத்துக் காளை இறந்து விட்டால், அந்தக் காளைக்கு மட்டுமே இறுதிக் காரியம் செய்வார்கள். வாழ்நாளில் இந்த நான்குபேரும் இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே புதிய ஆடைகள் உடுத்துவார்கள். அதாவது பட்டத்துக் காளை இறந்து விட்டால் அதற்குக் காரியம் செய்யும்போதும், புதிய காளையைத் தேர்வு செய்யும் நாளிலும்தான் புதிய ஆடைகள் அணிவார்கள். திருமணம் ஆகாதவரே இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு வந்த பிறகுதான் அவர்கள் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.

இத்தகைய பாரம்பர்யமும் சிறப்பும் கொண்ட கம்பம், நந்தகோபாலன் சாமி தம்பிரான் கோயிலில் மாட்டுப்பொங்கலை ஒட்டிப் புதிய பட்டத்துக் காளை அலங்காரத்துடன் பவனிவரும். அதற்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. கோயிலுக்குச் சென்று வழிபட்டு, தீவனம் வழங்கி மக்கள் மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர். புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்ததும் பட்டத்துக் காளையை வணங்கி ஆசிபெற்றுச் செல்வார்கள். இதன் மூலம் சந்தோஷமான வாழ்வும் புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன்: சூரியத் தலம்... பொய்ச்சத்தியம் செய்தால் 8 நாள்களில் தண்டனை!

கண்கண்ட கடவுள் சூரியபகவான். அவர் அருள் இருந்தால் பாவங்கள் விலகும். ஆரோக்கியம் கூடும். செல்வச் செழிப்பு உண்டாகும். இப்படி வரங்கள் அருளும் கிரகமாக அமரும் மேன்மையான நிலையை சூரியன் சிவ வழிபாட்டின் மூலம் ப... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!

7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை.அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சி... மேலும் பார்க்க

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிக... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.மலைகள் சூழ்ந்த ... மேலும் பார்க்க