காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சா...
Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?
Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் வராது.
கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, அந்த நாளைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன. இவற்றை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு களியாகச் செய்தோ எடுத்துக் கொள்ளலாம்.
கேழ்வரகை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேழ்வரகை அடையாகச் செய்து சாப்பிடும்போது, அது ரத்தத்தில் கலந்து சர்க்கரையாக மாறும் நேரம் சற்று தாமதமாகும். களியாக எடுத்துக்கொள்ளும்போது, அதைவிட சற்று விரைவாக சர்க்கரையாக மாறும்.
கூழாக எடுத்துக்கொள்ளும்போது மிக விரைவாக சர்க்கரையாக மாறும். இதன் அடிப்படையில்தான் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகள் கூழாகக் குடிக்கும்போது, தொட்டுக்கொள்ள காய்கறிகள் சேர்த்துக்கொண்டால் பாதிப்பில்லை.

கம்பு, கேழ்வரகு உணவுகளை தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு இரவில் கீரை அல்லது பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் தன்மை இருக்கும். அவர்கள் இரவு நேரங்களில் கூழ் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மற்றவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுப்பதால் கோடைக்கேற்ற சிறந்த உணவுகளாகப் பார்க்கப்படுகின்றன. அதுவே குளிர்காலம் என்றால் இவற்றை அடையாகவோ, களியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
நம் பாரம்பர்ய பானங்களான கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் மட்டுமல்ல, பானகம் போன்றவற்றையும் தொடர்ந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















