`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக...
`இனி, சங்கு சத்தம் மட்டுமே கேட்கும்; விசில் சத்தம் கேட்காது' - தவெக அரசை விமர்சித்த காளியம்மாள்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு பேசிய அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள், ``வெற்றி தோல்வி என்பது ஒரு களத்தில் சகஜம். எல்லாவற்றையும் சம மனநிலையோடுதான் ஏற்க முடியும். உலகத்திலேயே வென்று கொண்டே இருந்த படை ஒன்று வரலாற்றில் கிடையவே கிடையாது.
அ.தி.மு.க கண்டிராத வெற்றியும் இல்லை; அ.தி.மு.க கண்டிராத தோல்வியும் இல்லை. அப்படி இருந்தபோதிலும், பல்வேறு வெற்றிகளை, மக்களுக்கான நலத்திட்டங்களைக் கொடுத்து மக்களுக்கான கட்சியாக இன்று வரை அ.தி.மு.க இருந்து கொண்டிருக்கிறது. இந்த மண்ணில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற சிந்து சட்டமன்றத்தில் ஒரு பாட்டுப் பாடினார். அவர் பாடிய விதம் ஒரு மாதிரியாக இருந்ததால் எல்லோரும் அவரை விமர்சனம் செய்தார்கள்.
`கொடுத்ததெல்லாம் கொடுத்தார். ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை, ஊருக்காகக் கொடுத்தார்' என்று பாடினார். அந்த பாட்டும் எங்கள் தலைவருடையது தான். உங்கள் தலைவரிடம் அதுபோன்ற பாட்டு இல்லை. அந்த பாட்டுக்கான விளக்கத்தைப் பாருங்கள். கம்யூனிஸ சித்தாந்த்தை கம்யூஸ்ட்டுகள் பரப்பிக்கொண்டிருந்த காலத்தில் ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரரான பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் இந்தப் பாட்டை பாட வேண்டும். யாருக்கு என்ன பாட்டு பாட வேண்டும் என்பதை தயவு செய்து சிந்தித்து பாடுங்கள்.
விஜய்க்கு நிறைய பாட்டு இருக்கிறது. `மில்லி உள்ள போனா பாரு, கில்லி வெளிய வருவான்டா' என்று வேண்டுமானால் அவர்கள் பாடலாம். இதுதான் அவருக்குப் பாட வேண்டிய பாடல். ஏனெனில், அவர் பாடியுள்ளார். அரசியல் மீதான பார்வை மக்களிடம் என்ன இருக்கிறது. ஒரு கொத்தனார் வந்து வீட்டை அருமையாகக் கட்டிக்கொடுத்தால் அவரிடம் சம்பளம் கொடுப்பீர்களா அல்லது வீட்டு சாவியை அவரின் கையில் கொடுப்பீர்களா?
நாம் எப்படிப்பட்ட நெருக்கடி சூழலில் தள்ளப்பட்டிருக்கிறோம். இவர்கள் என்ன தத்துவம் பேசியிருக்கிறார்கள். என்ன கோட்பாடு வைத்திருக்கிறார்கள். மக்கள் பிரச்னைகள் பற்றி தெரியுமா, விவசாயிகள் பற்றி தெரியுமா? இல்லை. `பெண்களுக்கான பாதுகாப்பில் நான் சமரசமே செய்துகொள்ள மாட்டேன்' என்று முதலமைச்சர் சொல்கிறார். `எடப்பாடியார் ஆட்சிக்காலத்தின் தான் பெண்கள் மீதான குற்ற வழக்குகள் குறைவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியை நடத்துவோம்' என்றும் சொல்கிறார் முதமைச்சர் விஜய். சிறப்பான ஆட்சியே அ.தி.மு.க ஆட்சி தான் என்பதை விஜய்யே ஒத்துக்கொள்கிறார்.
தேர்தலுக்கு முன்பு எல்லோரும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது, யார் வாயிலும் விசில் இல்லை. எல்லோரிடமும் சங்கு தான் இருக்கிறது. இனிமேல், சங்கு சத்தம் தான் கேட்கும். விசில் சத்தம் கேட்காது. ஏன் தெரியுமா? மின்சாரக் கட்டணத்தை நம்மால் தாங்கவே முடியவில்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டும் நிலவுகிறது.
இவர்களிடம் என்ன கேட்டாலும், `தி.மு.க கஜானாவை காலி செய்துவிட்டுப் போய்விட்டது' என்று மட்டும்தான் சொல்வார்கள். விவசாயம் சார்ந்து கேள்வி கேளுங்களேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்வார். பள்ளிக்கல்வித்துறையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்களேன். அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்வார். கோயில் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி கேட்டால், பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்வார். அவர்களுக்குள் போட்டி நடக்கிறது. இவர் எப்படி நம்மை விட நான்கு கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம். அவர் என்னை முட்டாள் என்று நினைத்துக்கொள்வாரே என்பதால் படார் படாரென்று எழுந்து இவர்கள் பேசுவதை அவர்கள் உருவி, அவர்கள் பேசுவதை இவர்கள் உருவி, சட்டமன்றம் மாதிரியே நடக்கவில்லை. சந்தி சிரிக்கிறது.

முதலமைச்சரை எங்கு தேடுவது, எப்படி தொடர்பு கொள்வது? வி.ஏ.ஓ ஒருவர் `லஞ்சத்துக்குப் பதிலாக மீன் குழம்பு எடுத்து வருகிறீர்களா?' என்று கேட்கிறார். இதற்குப் பெயர்தான் மாற்றம். நீங்கள் கருவாட்டு குழம்பு வைத்துக்கொடுத்தால் உங்களுக்குக் கையெழுத்துப் போடப்படும் என்று வெளியில் போடு வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய பித்தலாட்டத்தனத்தை எவ்வளவு சாதாரணமாகச் செய்துவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் புதியவர்கள்தான் கற்றுக்கொண்டு செயல்படுங்கள். அதற்காக, தலைகணம் பிடித்துக்கொண்டு ஆடாதீர்கள். யாரும் இவர்களை விமர்சனம் செய்துவிடக் கூடாது. பக்கம், பக்கமாக எழுதுகிறார்கள். ஒரு கூட்டத்தில் நான் பேசிவிட்டு வந்த பிறகு என்னைக் குறிப்பிட்டு `அறிவுக் கெட்டவர்' என்று எழுதுகிறார்கள். அதிலும், `அறிவு கேட்டவர்' என்று பிழையோடு எழுதியிருக்கிறார்கள். நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில், இவர்களுக்குப் பேசவே தெரியவில்லை. அப்புறம் எப்படி எழுத வரும். ஆணவத்தின் உச்சத்துடன் செயல்படும் உங்களைத் தேடி அழிவு தானாகவே வரும்" என்றார்.














