`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக...
`ஈஸியா பணக்காரர் ஆக.!' - வாரன் பஃபெட் சொல்லும் இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க.!
முதலீட்டு உலகின் ஜாம்பவான் வாரன் பஃபெட். 96 வயது ஆகும் அவர் பொ்க்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவா் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். புதிய தலைவராக வாரன் பஃபெட்டின் மகன் ஹாவர்ட் பஃபெட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவில் இருந்து வருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொ்க்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய வாரான் பஃபெட் இனி கௌரவ தலைவராக நீடிப்பாா் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலீட்டில் வெற்றியாளராக இருக்க வேண்டும், பணக்காரர் ஆக வேண்டும் என நினைப்பவர்களுக்கு வாரன் பஃபெட்டின் வாழ்க்கையும், அவரின் வார்த்தைகளும் நல்ல வழிகாட்டி எனலாம். வாரன் பஃபெட்டை பின்பற்றியதால் ஒருவர் பணக்காரர் ஆனதையும், பின்பற்றாமல் போனதால் இன்னொருவர் கடனாளியாக ஆனதையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
கணேஷ்ராம் பிரபல ஐடி கம்பெனியில் டீம் லீடர். மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். அவருடைய குழுவில் பணிபுரிகிறார் கேசவன். மாதம் 55,000 ரூபாய் சம்பளம். ஏறக்குறைய இருவருக்கும் சம வயதுதான்.
இருவருமே பணிக்குச் சேர்ந்து 13 வருடங்கள் ஆகின்றன.
கேசவனிடம் சேமிப்பாக 25 லட்சம் ரூபாய் இருக்கிறது. ஆனால், கணேஷ்ராம் 40 லட்சம் ரூபாய் கடன் வைத்திருக்கிராரே தவிர சேமிப்பு ஏதும் இல்லை. அதிக சம்பளம் வாங்கியும், கணேஷ் கடனில் தவிக்கவும், குறைந்த சம்பளத்தில் கேசவன் பல லட்சங்கள் சேர்க்கவும் என்ன காரணம்..?
கேசவன் பணக்காரராக மாற அவர் செய்தது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. முதலீட்டு குரு வாரன் பஃபெட் பின்பற்றிய 5 விஷயங்களை, கொஞ்சம் கொஞ்சம் வாழ்க்கையில் கடைப்பிடித்தார். அதனால்தான் இன்று பணக்காரராக இருக்கிறார்.
கணேஷ் ஆடம்பர வாழ்க்கையிலும், தவறான முதலீட்டுப் பழக்கங்களாலும் எல்லாப் பணத்தையும் அழித்து கடனில் சிக்கிக் கிடக்கிறார். கேசவன் பின்பறிய பஃபெட்டின் பண ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
பண நிர்வாகத்திலும், முதலீட்டு முன்னெடுப்புகளிலும் நம் எல்லோருக்குமே மிகச் சிறந்த வழிகாட்டி வாரன் பஃபெட். பணத்தை சம்பாதிப்பதோடு, அதை நீண்டகால அடிப்படையில் எப்படிப் பெருக்குவது என்ற புதிய ஃபார்முலாவை உருவாக்கி வெற்றி பெற்றுக் காட்டியவர் அவர். அவர் பின்பற்றிய, வலியுறுத்திய பணம் குறித்த 5 தங்கமான விதிகளை நாம் எல்லோரும் பின்பற்றினால் நிச்சயம் பணக்காரர் ஆகும் கனவுப் பாதையில் பயணிக்க முடியும்.
அந்த மிகச் சுலபமான விதிகள் இவைதான்...

1. வருமானத்தைவிட குறைவாகச் செலவு செய்வது!
பணக்காரர் ஆவதற்கான முதல் படி, சம்பாதிப்பதைவிட குறைவாகச் செலவு செய்வதாகும். வாரன் பஃபெட், 1958-ல் அவர் வாங்கிய அதே எளிமையான வீட்டில்தான் இன்றும் வசிக்கிறார். இந்த எளிமைதான் அவரை மேலும் மேலும் கோடிகளைக் குவிக்க உதவியது எனலாம்.
கணேஷ்ராம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில், அவருடைய மாதாந்தரச் செலவுகள் 1,10,000 ரூபாயாக இருந்தது. கேசவன் 55,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும், 38,000 ரூபாய்க்குள் மாதாந்தரச் செலவை அடக்கினார். வருமானத்துக்கு ஏற்ற வாழ்க்கை முறைதான் பணக்காரர் ஆவதற்கான முதல் ஸ்டெப் என்பதை கேசவன் புரிந்துகொண்டிருக்கிறார்.
2. சேமித்தது போக மீதியைச் செலவு செய்யும் பழக்கம்!
பெரும்பாலான மக்கள் சம்பளம் வந்ததுமே செலவுகளைத்தான் முதலில் செய்கிறார்கள். பிறகு மிச்சம் இருந்தால் சேமிக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், நுகர்வு கலாசாரச் சூழலில் மிச்சம் என்பதே இருப்பதில்லை. அதனால் சேமிக்க முடிவதும் இல்லை.
கணேஷ்ராம் சம்பளம் வந்ததும் முதல் செலவாக இ.எம்.ஐ-களைத்தான் செலுத்துகிறார். வீட்டுக் கடன், கார் கடன், செல்போன், லேப்டாப் வாங்கியதற்கான இ.எம்.ஐ என மாதத்தில் கடன் மட்டுமே 65,000 ரூபாய் செலுத்துகிறார். பிறகு சேமிக்கவோ முதலீடு செய்யவோ எப்படி அவருக்குப் பணம் மிச்சம் இருக்கும்?
ஆனால், கேசவனோ, “செலவு செய்தது போக மீதியைச் சேமிக்காதீர்கள்; சேமித்தது போக மீதியைச் செலவழியுங்கள்” என பஃபெட் சொல்வதைப் பின்பற்றி முதல் செலவாக எஸ்.ஐ.பி முதலீட்டைச் செய்கிறார். அதனால்தான் குறைந்த சம்பளத்திலும் அவரால் பல லட்சங்கள் சேர்க்க முடிந்தது.
3. கூட்டு வட்டியின் சக்தியைப் புரிந்துகொள்வது!
முதலீட்டில் பணத்தைப் பல மடங்காகப் பெருக்கும் மேஜிக் கூட்டு வட்டி. பஃபெட் பணம் குவித்ததன் முக்கியமான ரகசியமே கூட்டு வட்டிதான். பங்கு சார்ந்த முதலீடுகளில் நீண்டகாலத்துக்கு பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு கூட்டு வட்டியின் பலம் நன்றாகப் புரிந்திருக்கும். இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பிப்பவர்கள் சிறிய அளவு தொகையை மாதம்தோறும் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தாலே, கூட்டு வட்டியின் சக்தியால் அவர்கள் ஓய்வுபெறும் போது பெரும் தொகை குவிந்திருக்கும்.
கேசவன், வேலைக்குச் சேர்ந்து மூன்றாவது மாதமே மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கிவிட்டார். அதனால்தான் அவரால் பல லட்சங்கள் சேர்க்க முடிந்தது. இன்னும் சில வருடங்களில் நிச்சயம் அவர் கோடிகளைக் குவிக்க முடியும்.
4. நன்றாகத் தெரிந்த விஷயங்களில் மட்டும் முதலீடு செய்வது!
இன்றைக்கு பலரும் சீக்கிரமாகப் பணம் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் பணத்தைப் போட்டு, பெரும் இழப்புகளைச் சந்திக்கிறார்கள். காரணம், அந்த வர்த்தகத்தில் உள்ள ரிஸ்க்குகளை புரிந்துகொள்ளாமல், மேம்போக்காக ஈடுபட்டதே. அதேபோல பல இளைஞர்கள் கிரிப்டோகரன்சி போன்ற புதிய களங்கள் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே பணத்தைப் போட்டு நஷ்டத்தைச் சந்திப்பதைப் பார்க்கிறோம்.

சுலபமாகப் புரியாத ஒரு தொழிலிலோ, துறையிலோ அல்லது முதலீட்டுத் திட்டங்களிலோ மற்றவர்கள் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக நாமும் பணத்தை முதலீடு செய்யக் கூடாது என்பது பஃபெட் சொல்லும் முக்கியமான முதலீட்டுப் பாடம்.
கிரிப்ட்டோகரன்சியில் முதலீடு செய்யலாமே என கேசவனிடம் பலரும் வலியுறுத்தினார்கள். ஆனால், தன்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததால்தான் அவரால் முதலீட்டை சுலபமாகக் கண்காணிக்க முடிந்தது.
5. கடன் நிர்வாகத்தில் கவனம்!
கடன் வாங்குவது தவறு கிடையாது. ஆனால், அதிக வட்டியிலான கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அதிக வட்டி கொண்டவை. அடுத்து, எதற்காகக் கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கான கடன் எனில் பரவாயில்லை. சுமையாக மட்டுமே மாறக்கூடிய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை முக்கியம்.
ஏற்கெனவே நல்ல செல்போன் வைத்திருந்தபோதிலும் கணேஷ்ராம் புது மாடல் அறிமுகம் ஆனதும் இன்னொரு செல்போனை இ.எம்.ஐ-யில் வாங்கினார். அவசியமே இல்லாத நிலையில் கடனில் பிரமாண்ட கார் வாங்கினார். ஆனால், கேசவன் பெரும்பாலும் இ.எம்.ஐ-யில் பொருள்கள் வாங்கமாட்டார். அதனால்தான் குறைவாகச் சம்பளம் வாங்கியபோதும் அவரால் முதலீட்டுக்குப் பணம் ஒதுக்க முடிந்தது.
பணக்காரர் ஆகும் இலக்கு என்பது திரைப்படங்களில் வருவது போல ஒரே நாளில் நடக்கும் விஷயம் கிடையாது. அது ஒரு நீண்டகாலப் பயணம். நிதி நிர்வாகத்தில் வாரன் பஃபெட் வலியுறுத்தும் இந்த 5 விதிகளையும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நிச்சயமாக எல்லோராலும் பணக்காரர் ஆக முடியும்.
















