"இன்று கொண்டாடுறாங்க; ஆனா ஒரு வருடத்திற்கு முன்பு..." - ரிஷிகாந்த் குறித்து 'மொத...
"நான் கையொப்பமிட்ட காசோலைகளைத் திருடினார்" - சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
நடிகை ராதா, அவருடைய சகோதரி அம்பிகா மீது மோசடி குற்றம்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.
அம்பிகாவும், தன்னுடைய சகோதரரும் தன் அனுமதி இல்லாமல், தன் அறைக்குள் நுழைந்து தான் கையொப்பமிட்ட காசோலையைத் திருடிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா புகார் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் காசோலை மூலம் அவர்கள் ரூ.46 கோடியைப் பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்திருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் இந்தப் பிரச்னை குறித்து முழுமையாகவும் நடிகை ராதா குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் புகாரில், "'ஆர்.ஆர் கார்டன்' என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறேன். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் தாயார் ஆகியோர் செய்து கொடுத்த குடும்ப ஏற்பாட்டின் மூலம் எனக்குக் கிடைத்த சொத்தான 'ஆர்.ஆர் கார்டன்' எனும் அமைப்பின் முழுமையான உரிமையாளர் நான் ஆவேன்.
அதேபோல, எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களும் அந்தந்தக் குடும்ப ஏற்பாட்டின் மூலம் தங்களுக்குரிய சொத்துகளைப் பெற்றுள்ளனர். எனது வணிகம் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, நான் அடிக்கடி பயணம் செய்து கேரளா, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற இடங்களில் தங்குவது வழக்கம்.
நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், சென்னை வளசரவாக்கத்திலுள்ள எனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம்.
எனது சகோதரி அம்பிகா நாயரும் அதே தரைத்தளப் பகுதியில் தங்கியிருந்து, தரைத்தளத்தில் உள்ள எனது பகுதிக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.
உறவுமுறையைக் கருத்தில் கொண்டு, எனது பகுதிக்கு வந்து செல்ல அவரை நான் அனுமதித்திருந்தேன்.
எனது பிசினஸை நிர்வகிப்பதற்காக, நான் இல்லாத நேரங்களில் தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணம், தோட்டம் பராமரிப்புப் பொருட்களுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்துவதற்காக, கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை எனது அறையில் வைப்பது வழக்கம்.

எனது வணிகப் பெயரை 'ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டுடியோ' என்பதிலிருந்து 'ஆர்.ஆர் கார்டன்' என மாற்றினேன். இது குறித்து எனது வங்கியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வங்கியிலிருந்து நடப்புக் கணக்கில் எனது வணிகத்தின் பெயர் 'ஆர்.ஆர் கார்டன்' என மாற்றம் செய்யப்பட்டது எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 'ஆர்.ஆர் கார்டன்' என்ற புதிய வணிகப் பெயரில் எனக்குப் புதிய செக் புக் வழங்கப்பட்டது. தற்போது அந்தப் புதிய காசோலை புத்தகத்தையே நான் பயன்படுத்தி வருகிறேன்.
புதிய காசோலை புத்தகம் எனக்கு வழங்கப்பட்டுவிட்டதால், எனது பழைய காசோலை புத்தகம் செல்லாததாகிவிட்டது. எனவே, அதை நான் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முற்றிலும் மறந்து புறக்கணித்துவிட்டேன்.
இத்தகைய சூழ்நிலையில், 17.09.2026 அன்று எனக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளிக்கும் விதமாக, எனது வங்கிக் கிளையிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் காசோலைகள் எனது சகோதரி அம்பிகா நாயரின் பெயரில் பணமாக்குவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக நான் எனது வங்கிக் கிளையைத் தொடர்புகொண்டு, அந்தக் காசோலைகள் திருடப்பட்டுச் சட்டவிரோத லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் பணப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு கோரினேன்.
மேலும், சட்டப்பூர்வமாகச் செலுத்த வேண்டிய கடன் அல்லது பொறுப்பைத் தீர்ப்பதற்காக அந்தக் காசோலைகளை எனது சகோதரி அம்பிகா நாயருக்கு நான் ஒருபோதும் வழங்கவில்லை.
ஏனெனில், எனக்கும் எனது சகோதரி அம்பிகா நாயருக்கும் இடையே எந்தவொரு காலகட்டத்திலும் எவ்விதப் பணப் பரிவர்த்தனையும் நடந்ததில்லை.
எனது வங்கியுடன் மேற்கொண்ட விசாரணையில், அந்தக் காசோலைகள் எனது சகோதரர் திரு. மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் கையெழுத்தால் நிரப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

எனவே, எனது சகோதரி அம்பிகா நாயரும் எனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் சட்டவிரோதமாகப் பயனடையும் நோக்கில் என்னை ஏமாற்றவும் மோசடி செய்யவும் பொதுவான எண்ணத்துடன் கூட்டுச்சதி செய்து, நான் இல்லாத நேரத்தில் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, எனக்குத் தெரியாமல் கையொப்பமிட்ட பிளாங்க் காசோலைகளைத் திருடி, அந்தக் காசோலைகளில் பெயர், தொகை, தேதி ஆகியவற்றைத் தங்களின் விருப்பப்படி நிரப்பி, எனது வங்கியில் பணமாக்குவதற்காகத் தாக்கல் செய்துள்ளனர்.
இது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். மேலும், எனது தங்க மற்றும் வைர நகைகள், சொத்து மற்றும் வங்கி ஆவணங்கள், பதிவேடுகள், பரிசுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை எனது அறையில் வைத்துள்ளேன்.
எனது சகோதரி அம்பிகா நாயரும் எனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் அவற்றைச் சரிபார்ப்பதிலிருந்து என்னைத் தடுத்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


















