`உங்கள் தயவால்தான் அவர் முதல்வராக இருந்தார்'- எஸ்.பி.வேலுமணி ஆலோசனை கூட்டத்தில் ...
இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, கோவையில் காலமானார்!
கோவை மாவட்டம், பெரியநாய்க்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் கவிஞர் புவியரசு (95). கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த இவர் கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ’கையொப்பம்’ என்ற கவிதை தொகுப்பிற்காகவும், வங்காள கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் “The Revolutionary”-ன் மொழிபெயர்ப்பான ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பிற்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர். ’வானம்பாடி’ என்ற இயக்கம் துவங்கப்பட்டதில், இவரது பங்கு மிக முக்கியமானது. ஓவியம் வரைவதிலும் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். நவீன நாடகங்களின் முன்னோடியாக உள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும் பங்களித்துள்ளார். முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை கவிஞர் புவியரசு காலமானார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 1931ம் ஆண்டு பிறந்தவர் கவிஞர் புவியரசு. இவரது இயற்பெயர் ஜெகநாதன். பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புதல்வர் பட்டம் பெற்ற இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஒஷோவின் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கலீல் கிப்ரான், ரவீந்தரநாத் தாகூர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்டோரின் நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தஸ்தவொஸ்கியின் கரம்சேவ் சகோதரர்கள், மிர்தாதின் புத்தகம் ஆகியவை இவரது சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்குகின்றன. 7 நாடகங்களை உள்ளடக்கிய ‘சக்தி’ என்ற நாடக தொகுப்பை வெளியிட்டுள்ளார். சிறந்த மேடை நாடகத்திற்காக 17 முறை ’நாடகரத்தினம்’ விருது பெற்றுள்ளார். இதேபோல கவிதை மற்றும் மொழிபெயர்ப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
’காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். ஆயிரக்கணக்கான கலையரங்கங்கள், பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறைப்புரை ஆற்றியுள்ளார். “தேடாதே, தொலைந்து போய்விடுவாய், வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன” என்பது கவிஞர் புவியரசு-வின் புகழ் பெற்ற வரிகள்.
ஆரம்பத்தில் ம.பொ.சி-யின் தமிழரசுக் கட்சியில் இருந்த இவர், முரண்பாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்த இவர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த கவிஞர் புவியரசு மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















