தீர்ந்தது குழப்பம்; இனி கால்பந்து திருவிழா! FIFA உலகக்கோப்பை போட்டிகளை எங்கு, எப...
Mimesis: மனித அனுபவங்களின் டிஜிட்டல் பிரதிபலிப்பு: சிந்திக்க வைக்கும் ‘மிமிசிஸ்’ ஆர்ட்!
இன்று நாம் எடுக்கும் புகைப்படங்கள், பகிரும் தகவல்கள், சமூக ஊடகப் பதிவுகள் என அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
காலப்போக்கில் இந்தப் பதிவுகள் வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், நமது நினைவுகள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுகின்றன. இந்த மாற்றத்தைக் கலை வழியாக ஆராயும் முயற்சியாக அமைந்துள்ளது, துக்ரால் & தாக்ராவின் ‘மிமிசிஸ்’ கண்காட்சி.
சென்னையில் அஸ்வித்தாஸ் கலைக்கூடத்தில், ஜூலை 17 வரை நடைபெறும் ‘மிமீசிஸ்’ எனும் டிஜிட்டல் தொழில்நுட்பக் கலைக் கண்காட்சி, பாரம்பர்ய ஓவியக் கண்காட்சிகளில் இருந்து சற்று வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது.

சமகால இந்தியக் கலை உலகில் தனித்துவமான படைப்புகளுக்காக அறியப்படும் துக்ரால் & தாக்ரா இந்தக் கண்காட்சியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் உருவாக்கியுள்ள இந்தப் படைப்பு தொகுப்பு, பார்வையாளர்களை ஓவியங்களைப் பார்ப்பதைத் தாண்டி, அவற்றின் பின்னால் இருக்கும் கருத்துகளைத் தேட வைக்கிறது.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள படைப்புகள் பிக்சல்கள், தரவுக் கோடுகள், வண்ணப் பட்டைகள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளை நினைவூட்டும் வடிவங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் பார்வையில் அவை கணினித் திரைகளில் காணப்படும் தரவு அமைப்புகளைப் போலத் தோன்றினாலும், அவற்றின் பின்னணியில் மனிதர்களின் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் உறவுகள் குறித்த சிந்தனைகள் இருப்பதைபோல் தெரிகிறது.

பிக்சல்கள், தரவுக் கோடுகள் போன்ற வடிவங்கள் இங்கே வெறும் தொழில்நுட்பக் குறியீடுகளாக இல்லை. அவை மனிதர்களின் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் உறவுகளின் காட்சி வடிவங்களாக மாற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் உலகின் காட்சிமொழியைப் பயன்படுத்தி மனித அனுபவங்களைப் பிரதிபலிப்பதே இந்தப் படைப்புகளின் மையக் கருத்தாகும்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் தரவுகள் அதிக முக்கியத்துவம் பெறும் இன்றைய சூழலில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
இந்த மாற்றங்களை விமர்சனப் பார்வையுடன் அணுகும் அதே நேரத்தில், தொழில்நுட்பத்தின் தாக்கத்தை புரிந்துகொள்ளவும் இந்தக் கண்காட்சி உதவுகிறது. பதில்களை வழங்குவதைவிட... கேள்விகளை எழுப்பும் கலை அனுபவமாகவே ‘மிமிசிஸ்’ அமைகிறது. நாம் வாழும் வாழ்க்கைக்கும் நாம் உருவாக்கும் டிஜிட்டல் உலகிற்கும் இடையிலான உறவை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் முயற்சியாக இது விளங்குகிறது.



கலை என்பது அழகியலை வெளிப்படுத்தும் ஓர் ஊடகம் மட்டுமல்ல... அது நாம் வாழும் காலத்தின் மாற்றங்களையும் பதிவுசெய்கிறது. அந்த வகையில், டிஜிட்டல் யுகத்தில் மனித வாழ்க்கை எவ்வாறு மாறிவருகிறது என்பதற்கான கலைப் பிரதிபலிப்பாக ‘மிமிசிஸ்’ அமைந்துள்ளது.
தொழில்நுட்பம் நிர்ணயிக்கும் உலகில் மனித அனுபவங்களின் மதிப்பு என்ன என்பதை சிந்திக்க வைக்கும் இந்தக் கண்காட்சி, சமகால சமூகத்தின் மாற்றங்களை பதிவு செய்யும் முக்கியமான கலை முயற்சியாக விளங்குகிறது.
- ராமலட்சுமி.சி

















