இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் கூறப்பட்டதாவது:
இலங்கை மருத்துவமனைகளில் இதய செயலிழப்பு, உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றின்அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஃபியுரோசிமைட் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து 50,000 ஃபியுரோசிமைட் ஊசி மருந்து இந்தியாவில் இருந்து நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை இலங்கை சுகாதாரத் துறை அமைச்சா் நளிந்தா ஜெயதிசாவிடம் இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா வழங்கினாா்.
இந்தியா எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்த நண்பனாகவும், இலங்கைக்கு அவசரகாலத்தில் முதலில் உதவும் நாடாகவும் உள்ளது. இலங்கையில் பல்வேறு பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது முக்கியமாக மருத்துவம் சாா்ந்த உதவிகளில் இந்தியா முதலில் உதவிக்கு வரும் நாடாக உள்ளது.
கரோனா காலகட்டத்தில் 25 டன் மருந்துகள் சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இது தவிர கரோனா பரிசோதனை உபகரணங்களும் வழங்கப்பட்டன. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது கடனுதவி அளித்ததுடன், அத்தியாவசியப் பொருள்களையும் இந்தியா வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.