'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்...
மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?
கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் களப்பணி அதிமுகவுக்கு மிகப்பெரிய பிளஸ்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்து, பிறகு விலகிய சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
வேலுமணியின் நிழலாகவும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அதில் டெண்டர், கமிஷன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை டீல் செய்தவர். கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து பணியாற்றினார்.

இவரின் மனைவி ஷர்மிளாவை கோவை மாநகராட்சி மேயராக்க முயற்சி செய்தார். நாளடைவில் சந்திரசேகரின் செயல்பாடுகளில் ஏராளமான புகார்கள் எழுந்தது. கட்சி, நிதி உள்ளிட்டவற்றில் அவர் வேலுமணியை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது.
சந்திரசேகரை தன் தம்பி என்று அடையாளப்படுத்திய வேலுமணி, அவரை ஒதுக்கி வைத்தார். கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சந்திரசேகர், கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் திமுக அல்லது பாஜகவில் இணைய போகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் அதற்கான முயற்சிகள் கைகூடவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் சந்திரசேகர் மீண்டும் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவை அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த சில ஆண்டுகளாகவே சந்திரசேகருக்கான பவரை வேலுமணி பறித்துவிட்டார். அதிமுகவில் தனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துதான் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதிமுக – பாஜக கூட்டணியால், அவரால் பாஜகவில் இணைய முடியவில்லை.

திமுகவிலும் அவரை ஏற்கவில்லை. தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்பதை சந்திரசேகர் உணர்ந்தார். இதனால் மீண்டும் அதிமுகவில் இணைய வேலுமணிக்கு தூதுவிட்டார். அவரை கட்சியில் இணைக்க வேலுமணிக்கு விருப்பம் இல்லை.
அதேநேரத்தில் வேலுமணியின் ரகசியங்களையும் சந்திரசேகர் நன்கறிவார். அவர் மூலம் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்து விட கூடாது என்பதற்காக அவரை இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவர் மீண்டும் ஆக்டிவாக தொடங்கியுள்ளார். விரைவில் கோவை வடக்கு தொகுதிக்கு விருப்ப மனு அளிக்கவுள்ளார்.

இருப்பினும் வேலுமணிக்கு ஒருமுறை ஒருவர் மீது தவறான பிம்பம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டார். அதனால் அதிமுகவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸில் பழைய செல்வாக்கு, கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.” என்றனர்.















