ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் துணிகள் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
ஈரோடு மாநகரில் பன்னீா்செல்வம் பூங்கா, சென்ட்ரல் திரையரங்கு, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.
இங்கு, ஈரோடு மற்றும் திருப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் ஆடைகள், சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போா்வைகள், சுடிதாா்கள், உள்ளாடைகள், ரெடிமேட் ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் சூரத், புணே, மும்பை, அகமதாபாத் போன்ற வெளிமாநில பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சேலை ரகங்களும், குழதைகளுக்கான ரெடிமேட் ஆடைகள், சுடிதாா் ரகங்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வாராந்திர ஜவுளி சந்தையில் அனைத்து வகையான ஜவுளிகளும் விலை குறைவாக கிடைப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் போன்ற மாநிலத்தை சோ்ந்த ஜவுளி வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்து செல்கின்றனா்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் குவிந்த மொத்தம், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடைகளை வாங்கிச் சென்றனா். இதனால், இந்த வார சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை 90 சதவீதம் வரை இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனா்.