சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ர...
கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் 5 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கிணற்றின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது.
பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது டன் கணக்கான மண் விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார்கள். இதைக் கண்டுப் பதறிய சக தொழிலாளர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை

மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு நபரை சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த துயரம் குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், "குண்டாடா பிரிவு பகுதியைச் சேர்ந்த 50 வயதான செல்வன், 40 வயதான சதீஸ் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரியில் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் இது போன்ற கட்டுமானப் பணிகளால் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழக்கும் துயரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அனுமதி பெறாமல் கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்த வருவாய்த்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.



















