BB Tamil 9: "துஷாரை நீ லவ் பண்றீயா.?" - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்
நெல்லை: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; குற்றம் நிரூபிக்கப்பட்டது எப்படி?
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு 14 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி கடந்த 8-ம் வகுப்பு படித்த போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அச்சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது தாயார், அவரை உள்ளூரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அச்சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் தந்தையே சிறுமியை சீரழித்தது தெரியவந்தது. தந்தை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சிறுமிக்கு குறை மாதத்தில் பச்சிளம் குழந்தை பிறந்தது. மறுநாளே அக்குழந்தை உயிரிழந்தது.

இந்த வழக்கில் அறிவியல் பூர்வ ஆதாரத்தை திரட்ட குழந்தையின் உடலில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியான முடிவில் சிறுமியின் கர்பத்திற்கு தந்தைதான் காரணம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதலில் குற்றத்தை மறைத்த தந்தை டி.என்.ஏ பரிசோதனை மூலம் சிக்கினார். நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். நீதிபதி சுரேஷ் குமார் தனது 76 பக்க தீர்ப்பில், “இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு. தந்தை என்பவர் குழந்தைக்குப் பாதுகாப்பாக அரணாக இருக்கக்கூடியவர். இந்த வழக்கில் டி.என்.ஏ பரிசோதனை முடிவு மிக முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. சிறுமி அளித்த வாக்குமூலம் வேதனைக்குரியது.

இது போன்ற கொடூர குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு எச்சரிக்கை அளிக்க முடியும். குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தீர்ப்பு அவசியமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள முதல் தூக்கு தண்டனை தீர்ப்பு இதுதான். அதே நேரத்தில் நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்புகளில் இது மூன்றாவது தூக்கு தண்டனை தீர்ப்பாகும்.





















