திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அர...
BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?
வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா.
“இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 80
சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா.

நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது.
“இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார்.
வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு.
“ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு.

‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ்
பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத்.
Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!)

தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது.
“வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”...
“இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ” என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி.

‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு
“பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி.
உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!)
உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம்.
எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார்.

“கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு
அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித்.
அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ.
“நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது.
திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு.

திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு.
‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ்
அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத்.
‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம்.
‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை.

“ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ.
விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















