BB Tamil 9: "துஷாரை நீ லவ் பண்றீயா.?" - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்
திட்டக்குடி விபத்து: 9 பேரை காவு வாங்கிய அரசுப் பேருந்து - இமைக்கும் நொடியில் அரங்கேறிய அசம்பாவிதம்!
மரண ஓலங்களால் அதிர்ந்த எழுத்தூர்
திருச்சியில் இருந்து 24.12.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னையை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து (SETC), திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.30 மணியளவில் ராமநத்தம் அடுத்திருக்கும் எழுத்தூரைக் கடந்து கொண்டிருந்தது.
அப்போது பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடியது. அதற்கடுத்த விநாடி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையைத் தாண்டி, சென்னை – திருச்சி சாலையில் பாய்ந்தது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களில் மோதிய பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
அப்போது பேருந்தில் இருந்தவர்கள் மரண ஓலத்துடன் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற ஆரம்பித்தனர். நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில், இரண்டு கார்களும் அப்பளமாக நொறுங்கின.
விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய மரண ஓலங்களால் எழுத்தூர் பகுதியே அதிர்ந்தது. அதைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் இருந்தவர்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்ததே தவிர, நொறுங்கிக் கிடந்த காருக்குள் இருந்தவர்களை மீட்க முடியவில்லை.
குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு
அதனால் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் கார்களுக்குள் இருந்தவர்களில் ஏழு பேர், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். அதையடுத்து மிக மோசமான காயங்களுடன் உயிருடன் இருந்த 5 பேர் மீட்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் ஒரு முதியவரும், குழந்தையும் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.

இரண்டு கார்களில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மற்ற மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதுடன், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
கார்களின் பதிவெண்களை வைத்து உயிரிழந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முன்பக்க டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அதற்கான காரணம்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
அரசு, ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம்
``பேருந்தோ அல்லது காரோ அந்த டயர்களின் அளவுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஆனால் எந்த அரசுப் பேருந்து ஓட்டுநரும் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.
அதிலும் குறிப்பாக இந்த அரசு விரைவுப் பேருந்துகள் (SETC), இரவு நேரங்களில் ரேஸில் செல்வதைப் போல பறக்கின்றன. மேலும் பேருந்துகளின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காக புதிய டயர்களைப் போடாமல், மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை (Retreaded Tyres) போடுவதும் இப்படியான விபத்துக்கு காரணம்.
இப்படியான தொழில்நுட்பக் காரணங்களுடன், அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களின் அலட்சியம்தான் அனைத்தையும் விட முக்கியமான காரணம்" என்று குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் சி.வெ.கணேசன், விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டனர்.
அப்போது விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட அவர்கள், மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் விபத்து குறித்த முழு அறிக்கையையும் கேட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் கூறியிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.




















