பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79
பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது.
ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ.
இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார்.
பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார்.
“சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித்
ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது.
“மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது.
கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா?
திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள்.
கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி.

ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா?
ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள்.
“என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு..
… சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி.

பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
‘ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’
“அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம்.
சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது.
ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார்.
“நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம்.
விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம்.

ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது.
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!)
‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி
அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!)
“அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார்.

பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா.
இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.
அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?!

“வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக்
அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார்.
‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!)
“இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா.
“மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா.

“உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல்
“ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!).
தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள்.
“மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள்.

“நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!


















