செய்திகள் :

BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா

post image

‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி.

பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது.

இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார்.

இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78

பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன.

“நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது.

‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு.

“என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை.

‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள்

பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு.

இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!)

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு.

“இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார்.

‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு

பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது.

“என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

“ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு.

‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது.

‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’

எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள்.

“பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும்.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா.

கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது.

அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ.

நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு

வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார்.

கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு.

பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு!

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன.

பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!).

ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம்

ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!).

‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது.

‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா?

சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார்.

‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு.

‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம்

டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!)

குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா.

“உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார்.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

“இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!)

“நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான்

குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான்.

ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது.

BB Tamil 9 Day 78
BB Tamil 9 Day 78

இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை.

அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது.

இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: "வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்"- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

அன்றே சொன்ன `மாஸ்கோ' கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க"- திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு"- பாரு குறித்து கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்

‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ -இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்க... மேலும் பார்க்க