"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் க...
TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக சார்பில் ஏற்கெனவே 120 மா.செக்களை விஜய் அறிவித்திருக்கிறார். எஞ்சிய தொகுதிகளுக்கான மா.செக்களை விஜய் இன்று அறிவிக்கப்போவதாக நேற்றிரவு தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை முதலே பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட ஆரம்பித்தனர்.
கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே மா.செக்களை அறிவிக்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'உழைத்தவர்களுக்கே பதவி கொடுக்க வேண்டுமெனக் கோரி' தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்தார்.

அவரை அலுவலகத்துக்கு அரை கிலோமீட்டர் முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். சில நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து ஆதரவாளர்களுடன் கூடிப் பேசியவர் விஜய்யின் காரை மறித்து அவரிடமே பிரச்னைகளை முறையிடத் திட்டமிட்டார். விஜய் மதியம் 1:45 மணியளவில் அலுவலகத்தை நோக்கி காரில் வர தன்னுடைய ஆதரவாளர்களுடன் அஜிதா விஜய்யின் கார் முன்பு பாய்ந்தார். பெண் நிர்வாகி காரின் மேல் விழுவதை அறிந்தும் விஜய்யின் கார் நிற்காமல் கூட்டத்தை கடந்து அலுவலகத்துக்குள் நுழைந்தது.
அதன் பிறகும், அஜிதா தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வெளியேவே காத்திருக்கிறார்.















