"ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்"- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பே...
மும்பை தேர்தலில் மனைவி, வாரிசு, உறவுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள்: நெருக்கடியில் அரசியல் கட்சிகள்!
மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றன. இப்பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் லாட்டரி மூலம் எந்த வார்டு பெண்களுக்கானது, ரிசர்வ் வார்டு எது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அவ்வாறு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள் நின்று வெற்றி பெற்ற வார்டுகள் பெண்களுக்காக அல்லது ரிசர்வ் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட வார்டுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அந்த வார்டுகளை விட்டுக்கொடுக்காமல் தக்கவைத்துக்கொள்ள அந்த வார்டுகளை தங்களது மனைவி அல்லது வாரிசுகள் அல்லது உறவினர்களுக்கு கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன.
சில கட்சிகள் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தாலும், சில தலைவர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை இருக்கிறது. பா.ஜ.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் இணை செயலாளர் சிவ்பிரகாஷ், தலைவர்கள் யாரும் தங்களது மனைவி அல்லது வாரிசுகள், உறவினர்களுக்கு சீட் கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் இக்கருத்தில் இருந்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் மாறுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''வேட்பாளரின் வெற்றி தன்மை, கள நிலவரம் மற்றும் உள்ளூர் உணர்வு ஆகியவை வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றும்''என்று தெரிவித்தார். பா.ஜ.கவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மனைவிகளுக்கு சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். தெற்கு மும்பை பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. தனது மகளுக்கு சீட் கேட்டுள்ளார். வடக்கு மும்பை எம்.எல்.ஏ. தனது மகனுக்கும், மத்திய மும்பையை சேர்ந்த எம்.எல்.ஏ. தனது மருமகளுக்கு டிக்கெட் கேட்டு கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், பா.ஜ.க போரிவ்லி எம்.எல்.ஏ சஞ்சய் உபாத்யாய் மற்றும் மும்பை பா.ஜ.க செயலாளர் விவேகானந்த் குப்தா ஆகியோர் ஒவ்வொரு கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, தலைவர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளின் மனைவிகளை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்றும், கட்சியில் தீவிரமாக பணியாற்றும் தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி இருந்தனர்.
உபாத்யாய், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எழுதிய கடிதத்தில், ''2029 சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் கோருகிறார்கள். இது சமூகத்திற்கு தவறான தகவலை கொண்டு சேர்க்கும். எனவே நீண்ட காலமாக பணிபுரியும் பெண் தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்'' என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த வாரம் மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடந்தபோது, முன்னாள் கவுன்சிலர்கள் பலர் தங்களது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தால் அதனை தங்களது மனைவிக்கு ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது குடும்ப பெண்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதேபோன்ற நிலைதான் அனைத்து கட்சியிலும் இருக்கிறது. ஆனால் நகராட்சி தேர்தலில் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் இருக்கும் லோஹா நகராட்சியில் பா.ஜ.க சார்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தேர்தலில் நிறுத்தப்பட்டு இருந்தனர். எனினும் அவர்கள் அனைவரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

















