ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் ...
ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயந்தி மகன் ஆகாஷுடன் மங்காபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். ஹரிணி, ஹரிஷ் இருவரும் தந்தையுடன் காதி போர்டு காலனியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஹரிணியுடன் அவரது தாய் ஜெயந்தியின் தம்பி செந்தில்குமார் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து ஹரிணி தந்தை ராம்குமாரிடம் கூறியதை அடுத்து, அவர் செந்தில்குமாரைக் கண்டித்துள்ளார். அதற்கு "எனது அக்கா மகளிடம் நான் அப்படித்தான் பேசுவேன்" என்று கூறிய செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது செந்தில்குமார், தனது தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி ஆகியோருடன் சேர்ந்து ராம்குமாரைக் கட்டையால் தாக்கியும், கம்பியால் தாக்கியும் உள்ளனர்.

அப்போது தடுக்க முயன்ற ஹரிணிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ராம்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமார், அவரது தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















