சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்...
திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இருந்தது. இதையடுத்து மற்ற பகுதியில் தேடிப்பார்த்தபோது கை, கால் பகுதிகள் வேறு இடத்தில் கிடைத்தது. போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யபட்ட நபர் யார் என்று அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்ட நபரின் கையில் ராகுல் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து போலீஸ் நிலையத்திலும் விசாரித்தபோது ராகுல் என்பவரை காணவில்லை என்று கூறி அவரது மனைவி ரூபி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் ரூபியை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் ரூபி முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் கொடுத்தார். இதனால் அவரது வாக்குமூலம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ரூபிதான் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் துணையோடு கணவனை வீட்டில் வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூபியும், அவரது காதலன் கெளரவும் உடனே கைது செய்யப்பட்டனர். ரூபியும், ராகுலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ராகுல் செருப்பு வியாபாரம் செய்து வந்தார். போலீஸார் ராகுல் வீட்டில் சோதனை நடத்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி, எலக்ட்ரிக் ஹீட்டர், பேக், ஸ்கூட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
தம்பதியின் 10 வயது மகள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வார்கள் என்றும், 3 பேர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் தனக்கு சாக்லேட் வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட ராகுலின் பல உடல் உறுப்புகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ரூபியின் காதலுக்கு ராகுல் தடையாக இருந்ததால் அவரை படுகொலை செய்துள்ளனர். மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனது கணவனை கொலை செய்து உடலை ஊதா கலர் டிரம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்து வைத்தார். அதேசம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் ராகுல் படுகொலை இருக்கிறது.




















