'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்
கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் அங்குசென்று உயர்ரக போதைபொருட்களை பறிமுதல் செய்தனர்.
அங்கு குழுமியிருந்த 46 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் கோவளத்தைச் சேர்ந்த பிதுன்(30), பெங்களூரைச் சேர்ந்த வேலன்ஸ் பால் (36), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா (27), கோகுல் கிருஷ்ணன் (34), இவரது மனைவி செளமி(33), மருங்கூரைச் சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ராஜூ(64), கோவாவைச் சேர்ந்த ஜெயராஜ் சிங் சவ்டா (35), பெங்களூரைச் சேர்ந்த சையத் பர்ஷான் (35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக வந்ததால் அவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. மேலும், விசா காலாவதி முடிந்த பின்னரும் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த பேவாஹ் அன்சாரி (30) என்ற பெண் மீதும் தனியாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், "கோகுல் கிருஷ்ணன் என்பவர் கோவா-வை மையமாகக்கொண்டு டூரிஸ்ட் ஏஜென்சி ஒன்று நடத்திவந்தார். அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் நட்பு கிடைத்தது. அந்த குழுவினர் இணைந்து ஒவ்வொரு நாட்டுகளிலும் போதை கூடுகையை அவ்வப்போது நடத்தி வந்தனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற போதை கூடுகைக்காக கோகுல கிருஷ்ணனின் குழந்தைக்கு பிறந்தநாள் எனக்கூறி ரிசாட் புக் செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு புரியும் வகையில் அழைப்பிதழ்கள் பதிவு செய்துள்ளார். டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை அந்த கூடுகை நடந்தது. 9-ம் தேதி இரவு அவர்கள் சிக்கினர். இதுவரை உள்ள போதை கும்பலில் இவர்கள் புதுவிதமாக உள்ளனர்.
இவர்கள் இதனை 'ஹிப்பி' கலாச்சாரம் என பெயரில் அழைக்கிறார்கள். சுமார் 30 வயதுக்குள், தேவைக்கும் அதிகமான பணம் சம்பாதித்துவிட்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று விதவிதமான போதைப்பொருள்களை அனுபவித்துவிட்டு, விரும்பிய விதத்தில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு உலகம் சுற்றுவது இவர்களின் நோக்கம்.
பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள்தான் அதில் இருப்பார்கள். போதையும், பாலியல் உறவும் மட்டுமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும். இந்த குழுவினர் கோவா-வை மையமாகக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள்.

பகலில் அமைதியாக இருப்பார்கள். சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் அவர்களின் ஆட்டம் தொடங்கும். தொடக்கத்தில் ட்ரம்ஸ் இசையுடன் ஆட்டத்தை தொடங்குவார்கள். மதுவில் தொடங்கி உயர்ரக போதைப்பொருட்களை பயன்படுத்தி உற்சாகத்தை அதிகரிப்பார்கள். அதற்கு ஏற்ப இசையின் வேகமும் அதிகரிக்கும். அதற்கு 'ட்ரிப் மியூசிக்' (Trip music) எனப்பெயர். வழக்கமான இசை என்றால் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால் இவர்களது இசையின் வேகமும், சத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
போதை பார்ட்டி நடக்கும் இடத்தில் பல வண்ண லைட்டுகளை இசைக்கு ஏற்ப ஒளிரவிடுவார்கள். ட்ரக்ஸ், உச்சகட்ட இசையும், மின்னும் விளக்குகளும் சேர்ந்து அவர்களுக்கு புதுவித போதையை கொடுக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பிய நபர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். ஒருநாள் நெருக்கமாக இருந்தவர்கள், மறுநாள் இணையை மாற்றிக்கொள்வார்கள். ஒரே இரவில் பலருடன் உறவு வைத்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த குழுவில் நீண்டநேரம் 'ஆட்டம்போடுபவர்கள்' யார் என போட்டிகளும் நடக்குமாம்.
இதற்கு முன்பு தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இந்த கூடுகையை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில்தான் அவர்கள் சிக்கியுள்ளர்" என்றனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் எஸ்.பி டாக்டர் ஸ்டாலினிடம் பேசினோம், "அந்த கும்பல் உயர்ரக போதைபொருட்கள் பயன்படுத்தி உள்ளனர். ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதற்காகவே சமூக வலைதள பக்கம் வைத்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்குமுன்பு இதுபோன்ற கூடுகை நடத்தியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். கைது செய்யப்பட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் கூடுதல் விபரங்கள் தெரியவரும்" என்றார்.



















