'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருவாபரணப் பெட்டி; 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்!
கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்று திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அச்சன்கோவில் மண்டல மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்:
பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்காக சுவாமியின் திருவாபரணங்கள் கடந்த 35 ஆண்டுகளாக தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பக்தர்கள் தரிசனத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது.
இந்த ஆண்டு 36-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழக பொறுப்பாளரும் திருவாபரண கோஷயாத்திரை பொறுப்பு அதிகாரியுமான தென்காசி ஹரிஹரன் குருசாமி தலைமையில் புனலூரில் இருந்து சிறப்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்டது.

திருவாபரணப் பெட்டியில் உள்ளவை:
திருவாபரணப் பெட்டியில் சுவாமியின் திருமுகம், மார்பு, கைகள், கால்கள், பெரிய கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஐயப்பனே தன் உடல் வாளாக வைத்திருந்ததாகக் கூறப்படும், நேரத்திற்கு நேரம் இடத்திற்கு இடம் எடை வேறுபடும் காந்தமலை மாயத் தங்க வாளும் இந்த திருவாபரணப் பெட்டியில் அடங்கும்.
புனலூர் அரசு கருவூலத்திலிருந்து இன்று காலை எடுத்து வரப்பட்ட திருவாபரணப் பெட்டி, புனலூர் கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தென்காசிக்குப் புறப்பட்டது.
பின்னர் யானை முன்செல்ல, பஞ்சவாத்தியம் முழங்க, பக்தர்களுடன் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக புனலூரில் நகர வலமாக திருவாபரண கோஷயாத்திரை நடைபெற்றது. பக்தர்கள் திருக்குடை ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க திருவாபரணப் பெட்டியை வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து தென்மலை, ஆரியங்காவு உள்பட அனைத்து ஊர்களிலும் ஊர் மக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக எல்லையான கோட்டைவாசல் பகுதிக்குள் திருவாபரண கோஷயாத்திரை வந்தடைந்த பின்னர், அங்கிருந்து கேரள போலீசாருடன் இணைந்து தமிழக காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு வந்தடைந்தது.
பின்னர் திருவாபரணப் பெட்டி வரவேற்புக் குழுவினர் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.




















