சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்...
உச்ச நீதிமன்றத்தின் வரையறையால் ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா? மத்திய அரசு என்ன சொல்கிறது?
இந்தியாவின் 'பச்சைக் கவசம்' என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
என்ன பிரச்னை?
'குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மேல் உள்ள நிலபரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும்' - இந்த வரையறையைக் கடந்த நவம்பர் 20-ம் தேதி, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இது தான் தற்போதைய கொந்தளிப்பிற்குக் காரணம்.
இந்த வரையறை 90 சதவிகித ஆரவல்லி மலைத்தொடரை பாதிக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவால் ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க தோண்டல்கள், ஆக்கிரமிப்புகள் நிகழலாம். இதனால், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், பல்லுயிர்தன்மை பெரிதும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆரவல்லி மலைத்தொடர் பற்றி...
இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமான ஒன்று, 'ஆரவல்லி மலைத்தொடர்'. இது சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடம்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் படர்ந்திருக்கும் இந்த மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள் தார் பாலைவனமாக மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். இந்த மலைத்தொடர் அந்தப் பகுதியில், 'இயற்கை சுவராக' இருந்து வருகிறது.
2 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த மலைத்தொடர் பல லட்சம் மக்களுக்கு சுத்தமான நீர் மற்றும் காற்றை வழங்கி வருகிறது. மேலும், மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட் ஆகியவற்றுக்கும், ஈயம், துத்தநாகம், தாமிரம், தங்கம், டங்ஸ்டன் ஆகியவற்றுக்கும் இருப்பிடம்.
தொடரும் சட்டப்போராட்டம்
இந்த மலைத்தொடரில் சட்டத்திற்குப் புறம்பான சுரங்க வேலைகள் நடக்கிறது என்றும், மலைத்தொடருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு, நீண்ட காலமாக நடந்து வந்தது.
அதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த கமிட்டி வழங்கிய மேற்கூறிய வரையறையை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

ஆரவல்லி மலைத்தொடரைப் பொறுத்தவரை, 90 சதவிகித மலைத்தொடரின் குன்றுகள் 100 மீட்டருக்கு உயரம் குறைவானதுதான். உதாரணத்திற்கு ராஜஸ்தானில் இருக்கும் இந்த மலைத்தொடரின் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 மட்டும் தான் தற்போதைய வரையறையைப் பூர்த்தி செய்யும்.
இந்தக் குன்றுகள் மலைத்தொடரில் இருந்து நீக்கப்படும்போது, சுரங்க வேலைகள் தொடங்கப்படலாம்... கட்டடங்களுக்காக ஆக்கிரமிக்கப்படலாம் என்பது தான் தற்போதைய அச்சம்.
அமைச்சர் பதில்
இந்த அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், "உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரையறையில் 90 சதவிகித ஆரவல்லி மலைத்தொடர் அடங்கும். அதனால், அச்சம் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்த அச்சம் சுற்றுச்சுழல் ஆர்வலர்களை விட்டு நீங்கவில்லை.




















