தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!
SIR: `இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று திமுக-காரர்களாகி விடுகிறார்கள்!' - இபிஎஸ்
சேலம் மாவட்டம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தவெக விருப்பப்பட்டால் பாஜக கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது அவருடைய கருத்து. திமுக மக்கள் விரோத அரசாங்கம் அதை அகற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்துடைய கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அதிமுக ஆட்சி இருந்தபோது தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நோக்கத்தில் தமிழர்களின் முக்கிய பண்டிகளில் தைப்பொங்கல் தான் முக்கிய பண்டிகை. அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசு தொகை கொடுத்தார்கள். அதிமுக அரசு இருந்தபோது குடும்ப அட்டைக்கு 2,500 ரூபாய் நிதியும் கொடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது. பொங்கல் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படும் என்று அறிவிப்பு இதுவரை வரவில்லை. தைப்பொங்கல் அன்று மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் உள்ளது. இந்த ஆண்டு திமுக-விற்கு இறுதி ஆண்டு. இனி ஆட்சிக்கு வர மாட்டார்கள்.

இந்த ஆண்டாவது மக்கள் மனம் குளிரும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2,500 ரூபாய் கொடுத்தபோது, ஏன் 5,000 ரூபாய் கொடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தார். அதே கேள்விதான் நாங்களும் எழுப்புகிறோம், முதல்வராக உள்ள ஸ்டாலின் 5,000 ரூபாய் பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
150 நாள்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அரசு குறிப்பிட்டு இருந்தது. இதுவரை நிறைவேற்றினர்களா? மத்திய அரசு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாள்களாக உயர்த்தி உள்ளது. ஆனால் அதை பாராட்டுவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை. பெயர் மாற்றம் அறிவித்துள்ள நிலையில், அதே பெயர் தொடர வேண்டும் என்று அதிமுக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

ஒவ்வொரு ஊராக சென்று மக்களை சந்தித்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்கள். பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றினார்களா? மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். அதிமுகவை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றுவோம். விரைவில் அதிமுக தலைமை, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்படும். எஸ்.ஐ.ஆர் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டால், போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள், 21 ஆண்டு காலமாக எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அதனால் இறந்தவர்கள் தேர்தல் நேரத்தில் உயிர் பெற்று வந்து திமுக-காரர்களாக ஓட்டு போட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால்தான் பதறுகிறார்கள். உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும் இதனை வரவேற்கிறோம்" என்றார்.


















