13 வருட கோமா: 31 வயது இளைஞரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமா உச்ச நீதிமன்றம்?
விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறிஸ்துமஸ் விழா பின்னணி
விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' என அரசியல் டச்சோடு பேசி முடித்திருக்கிறார். திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் நிகழ்வின் பின்னணி என்ன?

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் தவெகவை தொடங்கியிருந்தார். கடந்த செப்டம்பரிலேயே முதல் மாநாட்டை நடத்தி ஆக்டிவ் அரசியலுக்கும் வந்துவிட்டார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருக்கவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் விழாவை பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். இதற்கு பின்னணியிலும் சில காரணங்கள் இருக்கிறது.
மேடைகளில் 31% அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கம்பு சுற்றினாலும், குறைந்தபட்சமாக 20% வாக்குகளாவது தங்களுக்கு கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமென நம்புகிறார்கள். காரணம், விஜய்யே ஒரு கிறிஸ்தவர், சிறுபான்மையினர்.
ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வந்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வக்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் ஸ்பெசலாக செய்திருக்கவில்லை.

இந்த சமயத்தில்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறை மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சிறுபான்மையினர் மத்தியில் திமுக மீண்டும் தன்னுடைய பலத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டது. மேலும், முதல்வர் தலைமையிம் ஒரு மெகா கிறிஸ்துமஸ் விழாவையும் திட்டமிட்டு திருநெல்வேலியில் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
விஜய் திமுகவைத்தான் பிரதானமாக எதிர்க்கிறார். திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளைத்தான் அவரும் குறிவைக்கிறார். ஆனால், அந்த வாக்குகளைப் பெற விஜய் தரப்பு பெரிதாக வியூகங்களை வகுக்கவில்லை. தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த விவகாரத்தில் சைலண்ட் மோடிலேயே இருந்தால் திமுக விஜய்யை பாஜக-வின் பி டீம் என முன்வைத்து நரேட்டிவை செட் செய்வார்கள் என்கிற அச்சமும் அது மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்கிற யதார்த்தமும் விஜய்யின் வியூக தரப்பு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் திமுக திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழா நடத்திய அடுத்த நாளே கிறிஸ்துமஸ் விழாவுக்கென அழைப்பு விடுத்து, வேகவேகமாக நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.

திமுகவின் கூட்டத்தில் ஒரு சில பாதிரியார்கள் திமுகதான் நம்மை மீட்க வந்தவர்கள் என பேசியதைப் போலவே, இந்தக் கூட்டத்திலும் பாதிரியார்களும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை மீட்பர் அந்தஸ்துக்கு தூக்கி வைத்து பேசினர். ஒரு சிலர் விஜய்யே நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றெல்லாம் பேசினர். விஜய் திமுகவை தாக்கி எங்கேயும் பேசவில்லை. ஆனால், கூட்டத்தில் பேசிய சிலர் 'திராவிட கட்சிகளின் ஆட்சியில் அடிப்படை தேவைகளை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது' என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
'ஒரு அரசன் வருவான்!'
விஜய் சுருக்கமாகத்தான் பேசியிருந்தார். எல்லாருடைய வழிபாட்டு நெறிமுறைகளையும் மதித்து நம்பிக்கைகள் வேறாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் வாழ்வதுதான் தமிழ் மண்ணின் இயல்பு என பேசியிருந்தார். இவ்வளவு தெளிவாக பேசும் விஜய், தமிழகமே பரபரப்பாக பேசிய திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏன் அமைதியாக இருந்தார் என்பது அவரின் வியூக தரப்புக்கே வெளிச்சம்.
'ஒரு அரசன் வருவான்!' என Jacob & Joseph பைபிள் கதை ஒன்றையும் விஜய் மேற்கோள்காட்டி பேசியிருந்தார். சகோதரர்களின் பொறாமையால் பாழங்கிணற்றில் தள்ளப்பட்டி வேறு நாட்டிற்கு அடிமையாக அனுப்பப்பட்டு அங்கிருந்து மீண்டு வந்து அரசனாகும் ஜோசப்பின் கதை அது. அந்த ஜோசப்போடு தன்னை ஒப்பிட்டு 'ஒரு அரசன் வருவான்!' என விஜய் பன்ஞ்சாக பேசியிருந்தார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக, நான் உங்களின் ஒருவன்தான் உங்களுக்காகதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்கிற நெருக்கத்தை காட்ட விஜய் அந்த கதையை குறிப்பிட்டிருக்கலாம். அரசியல்ரீதியாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

ஈரோட்டில் கொஞ்சம் தடுமாறி விஜய்யை புரட்சித் தலைவர் என கூற வந்து சுதாரித்து புரட்சித் தளபதி எனக் கூறி செங்கோட்டையன் சமாளித்திருந்தார். ஆனால், அந்த புரட்சித் தளபதி பட்டம் அப்படியே ஒட்டிக்கொண்டது. பாதிரியார்கள் கூட புரட்சித் தளபதி என அடையாளப்படுத்தி பேசியிருந்தனர்.
நடப்பு ஆண்டில் விஜய்யின் கடைசி அரசியல் கூட்டம் இந்த கிறிஸ்துமஸ் விழாவாகத்தான் இருக்கும். அடுத்ததாக மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா. அதை முடித்துவிட்டு புத்தாண்டில் சேலத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.!
















