13 வருட கோமா: 31 வயது இளைஞரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமா உச்ச நீதிமன்றம்?
தேனி: தொடங்கியது 4-வது புத்தக திருவிழா; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை வழங்கிய எம்.பி!
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், தேனி எம்.பி தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளையும், கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டனர்.
அப்போது, சிறைகள் மற்றும் சீர்திருத்த துறையின் சார்பாக புத்தகங்கள் தானமாக வாங்குவதெற்கென பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தை பார்த்த கலெக்டர் மற்றும் எம்.பி தங்க தமிழ்செல்வன் ஆகியோர், புத்தகங்களை வாங்கி அவற்றை தானமாக வழங்கினர். இந்த புத்தக திருவிழாவனது 21.12.2025 முதல் 28.12.2025 வரை 8 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்நாள்களில் மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதன்படி நேற்று செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி ஆகியோரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு பேசவுள்ளார்.
புத்தக திருவிழா குறித்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் பேசும் போது ,” நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் பயின்றவர். படிப்பின்மீதும், புத்தக வாசிப்பின் மீதும் அவருக்கு இருந்த ஆர்வத்தால்தான் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆனார். அதுபோல இன்றைய இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்" என தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்ரஞ்சித் சிங்பேசும் போது, “மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மின்னணு புத்தகங்கள் (e-Books) வந்தாலும், புத்தக வாசிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.





















