பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா
பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே சிலர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ராகுல் காந்தி வெளிநாடு சென்று இருந்தபோது அவரது இடத்தில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்திதான் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முழு அளவில் பிரியங்கா காந்தி தயார் நிலையில் வந்திருந்தார்.
அதோடு சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டதோடு பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேசிக்கொண்டிருந்தார்.

பாட்டி இந்திரா காந்தி போன்று.!
மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கேரளாவில் நிறைவேற்றப்பட இருக்கும் நெடுஞ்சாலைகள் குறித்து பிரியங்கா பேசினார். ஆனால் ராகுல் காந்தி இதுவரை சபாநாயகர் கூட்டிய தேநீர் விருந்தில் கலந்துகொண்டது கிடையாது. பிரியங்கா காந்தி அந்த நடைமுறையை மாற்றி இருப்பது பா.ஜ.கவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
பிரியங்கா காந்தி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், ''பிரியங்கா காந்திக்கு வாய்ப்பு கொடுத்தால் அவரது பாட்டி இந்திரா காந்தி போன்று வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துக்காட்டுவார்'' என்று குறிப்பிட்டார். பங்களாதேஷில் இந்து பிரஜை படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசிய இம்ரான் மசூத், `பிரியங்கா காந்தியை பிரதமராக்கிப்பாருங்கள். அவர் எப்படி பதிலடி கொடுக்கிறார் என்று தெரியும்' என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ''அரசியலில் அவருக்கு(பிரியங்கா) ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதிலும் அவருக்கு ஒரு சிறந்த எதிர்கால பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். இது காலப்போக்கில் நடக்கும், இது தவிர்க்க முடியாதது என்று நான் நினைக்கிறேன். பிரியங்காவை பலரும் பிரதமராக பார்க்க விரும்புகின்றனர். பிரியங்காவை மக்கள் பாராட்டுகின்றனர். பிரியங்கா தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியிடமிருந்து அதிகம் கற்று இருப்பார் என்று நினைக்கிறேன்.
மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர் பேசும்போது, மனதிலிருந்து பேசுகிறார். உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார், மேலும் அவற்றைப்பற்றி விவாதிக்கிறார்," என்று வதேரா கூறினார்.

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியில் மாற்றத்தை விரும்புவதாக பெயர் சொல்ல விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அத்தலைவர் மேலும் கூறுகையில்,'' பிரியங்கா காந்தியை எளிதில் அணுக முடிகிறது. ஆனால் ராகுல் காந்தியை கட்சியினரால் எளிதில் அணுக முடியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்வதைத்தான் ராகுல் காந்தி கேட்டு செயல்படுகிறார். ஆனால் பிரியங்கா காந்தி அனைவர் கருத்தையும் கேட்கிறார். அதோடு பிரியங்காவை பார்ப்பது மறைந்த இந்திரா காந்தியை நேரில் பார்ப்பது போன்று இருக்கிறது''என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களின் இக்கருத்தால் ராகுல் காந்தி மீது காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. பா.ஜ.க-வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு வேறு ஒருவர் தலைவராக வரும்போது அவரை எதிர்கொள்ளக்கூடிய வலுவான தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். எனவே பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியில் முன்னிலைப்படுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று கட்சியில் தலைவர்கள் பலரும் நினைக்கின்றனர்.!














