பெங்களூரு: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி; நடுரோட்டில் சுட்டுக் கொலைசெய்த இள...
Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக
விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்து 'தளபதி வந்து பார்த்தால்தான் நகர்வேன்!' என கொடி பிடித்தார்.

மாலை 6 மணிக்கு மேலாக, 'பிரச்னை பண்ணாதீங்க. நல்லபடியா முடிச்சு தர்றோம்' என மேலிடத்திலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு. அதன் பிறகுதான் இடத்தை காலி செய்தார். இத்தனை களேபரங்களுக்கும் காரணம் நீண்ட காலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட 'கோஷ்டி பூசல்'. தூத்துக்குடி மட்டுமல்ல அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் இதே மாதிரி கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கோஷ்டி மோதல்களால் கட்சிக்கு தலைவலியே காத்திருக்கிறது என புலம்புகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.
தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி கேட்டுதான் விஜய்யின் காரை மறித்த அஜிதா பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். அந்த தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை நேற்று நியமித்திருக்கிறார் விஜய். சாமுவேலோடு சேர்த்து நேற்று 8 பேருக்கு மா.செக்கள் நியமன ஆணையை விஜய் வழங்கியிருந்தார். திங்கள் கிழமை இரவு 9 மணிக்கு மேல்தான் அந்த 8 மா.செக்களுக்கும் பனையூரில் வைத்து நாளை (செவ்வாய்) நிகழ்ச்சி இருக்கும் என மெசேஜ் போயிருக்கிறது. தனக்கு எந்த அழைப்பும் வராததால் சுதாரித்துக் கொண்ட அஜிதா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

அஜிதா vs சாமுவேல்
விஜய்யின் காரை மறிக்கும் அளவுக்கு அஜிதாவுக்கு என்ன பிரச்னை அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். 'மக்கள் இயக்கமா இருந்தப்போ தென் மாவட்டங்கள்ல முக்கிய பொறுப்புல பவர்புல்லா இருந்தவரு சஜி. பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் அவர் நெருக்கம். சஜி இல்லாம அவர் எங்கேயும் போகமாட்டாரு. அந்த சஜிதான் அஜிதாவுக்கு எதிரா வேலையை பார்த்துட்டு போயிட்டாரு. கட்சி தொடங்குன உடன தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளரா போஸ்டிங் வாங்கி அக்கா ஆக்டிவ்வா வேலை பார்த்துட்டு இருந்தாங்க. சில கூட்டங்கள்ல ஆனந்த் அண்ணனே 'நல்லா வேலை பண்றீங்க'னு அக்காவை பாராட்டி இருக்காரு. எல்லாம் நல்லா போயிட்டு இருந்த சமயத்துலதான் அந்த சஜி சாமுவேல்ங்ற ஆள கட்சிக்குள்ள கொண்டு வராரு.
பனையூர் வரும்போதெல்லாம் அந்த ஆள கூட்டிட்டு வந்து ஆனந்த் அண்ணங்கிட்ட அறிமுகப்படுத்தி நெருக்கமாக்கி விடுறாரு. ஊர்லயும் மத்திய மாவட்டம் சாமுவேலுக்குதான்னு இவங்களே பேச்ச கிளப்பி விடுறாங்க. என்னன்னு கேட்க போனப்ப அந்த சஜி, 'வேணும்னா மாநில அளவுல ஒரு போஸ்டிங் வாங்கி தரேன். மாவட்டத்தை விட்டுக் கொடுத்துருங்கன்னு' மிரட்டுற தொனியில பேசியிருக்காரு. சஜி, சாமுவேல் தரப்புக்கிட்ட பெரிய தொகையா வாங்கிட்டதா சொல்றாங்க. உண்மையா உழைச்ச ஆளு கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தருக்காக விட்டுக் கொடுக்க முடியுமா? இந்தப் பிரச்னையை ஜனவரிலயே ஆனந்த் அண்ணங்கிட்ட வந்து சொன்னோம். அவரு கண்டுக்கவே இல்லை.

'நீ போ நான் பார்த்துக்குறேன்'னு சொன்னாரே தவிர, செஞ்சது எல்லாம் சஜி தரப்புக்கு ஆதரவாதான் செஞ்சாரு. என்ன ஆனாலும் பரவாயில்லன்னு தூத்துக்குடில நாங்க வழக்கம்போல ஆக்டிவா வேலை பார்த்துட்டு இருந்தோம். கல்வி விழா, பொதுக்குழு, ஆண்டு விழான்னு எல்லா நிகழ்ச்சிலயும் பாஸ் கூட கொடுக்காம அக்காவை அலையவிட்டு அசிங்கப்படுத்துனாங்க. 6 மாசத்துக்கு முன்னாடி சாமுவேல கூப்பிட்டு நீங்கதான் மா.செ வேலையை பாருங்கன்னு ஆனந்த் அண்ணன் சொல்லியிருக்காரு. அவரும் ஊர்ல போஸ்டர் அடிச்சு வேலையை ஆரம்பிச்சிட்டாரு. இடையில சஜியும் நெஞ்சு வலியில இறந்துட்டாரு.
சஜி போனதுக்கு அப்புறமாச்சு நிலைமை மாறும்னு பார்த்தா இல்ல. ஒரு 10 நிமிஷம் உட்காந்து என்ன பிரச்னை, உண்மையா உழைச்சது யாருன்னு கேட்டா விஷயம் தெரிஞ்சிரும். ஆனா, அதை கூட இங்க யாரும் கேட்கல. கட்சிக்காக அக்கா 2 வருசத்துல பெரும் பணம் செலவளிச்சிருக்காங்க. ஆனந்த் அண்ணன் எதையும் மதிக்கவே இல்லை. போஸ்டிங் போடுறப்போ நாங்க பிரச்னை பண்ணுவோம்னுதான் போடாமலே இருந்தாங்க. இதெல்லாம் தளபதிக்கு தெரியுமான்னே தெரியல. அவருக்கு தெரியப்படுத்தணும் அவர் கூப்பிட்டு பேசணும்னுதான் காரை மறிச்சோம்' என்கின்றனர் அஜிதா ஆதரவாளர்கள்.

அஜிதா அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த சமயத்தில் கட்சியில் விஜய்யின் நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் ராஜ்மோகனும் பேசினர். இதிலேயே அஜிதா தரப்பு அப்செட். 'எல்லா விஷயமும் தெரிந்த பொதுச்செயலாளர் அலுவலகத்தை விட்டே வெளியே வராமல் ஒளிந்திருக்க எங்களிடம் பேசுவதற்கு இவர்கள் யார்?' என கொந்தளித்தனர் தூத்துக்குடியினர்.
பில்லா ஜெகன்
'அஜிதாவோட அண்ணன் பில்லா ஜெகன். அவர் மேல நிறைய வழக்கு இருக்கு. மேலும் அவர் திமுக ஆதரவாளர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமா இருக்காரு. அந்த குடும்பத்துல இருக்கவங்களுக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்? அந்தத் தொகுதியில நாடார்கள் ஓட்டுதான் அதிகம். அங்க எப்படி ஒரு மாற்று சமுதாய பெண்ணை மா.செ ஆக்க முடியும்?' என அஜிதாவுக்கு எதிராக கம்பு சுற்றுகிறது பனையூரின் இன்னொரு தரப்பு.

'பில்லா ஜெகன் அஜிதாவோட அண்ணன்தான். ஆனா, இப்போ அவர் கூட எந்த தொடர்பும் இல்ல. அவரும் தவெக சம்பந்தப்பட்ட விவகாரங்கள்ல கலந்துக்குறதே இல்ல. அப்படி நீங்க லாஜிக் பார்த்தா சாமுவேலை எப்படி மா.செ ஆக்குனீங்க? அவர் குடும்பமும் திமுக அமைச்சர் கீதா ஜீவன் குடும்பமும் நெருங்கிய சொந்தமாச்சே. தொகுதியில நாடார்கள் அதிகம் இருக்குறாங்கதான். ஆனா, கணிசமா மீனவ சமுதாய மக்களும் இருக்காங்க. நாங்க அவங்களை மனசுல வச்சு மட்டும் வேலை பார்க்கல. நாடார் மக்களையும் ஈர்க்குற வகையில எல்லாருக்காகவும்தான் தொகுதியில வேலை பார்க்குறோம். அப்படியிருக்கப்ப குடும்பத்தையும் சாதியையும் சாக்கா சொல்றதை ஏற்க முடியாது' என்கிறனர் அஜிதா தரப்பினர்.
'தளபதியோட காரை மறிச்சு அசிங்கப்படுத்தியிருக்காங்க. அவங்களை இந்நேரம் கட்சியை விட்டே தூக்கியிருக்கணும். ஆனா, தடாலடியா எதுவும் செய்யக்கூடாதுன்னுதான் தளபதி அமைதியா இருக்கிறார்' என சூடாகின்றனர் பனையூரின் இன்னொரு கோஷ்டியினர்.

'ஜனவரி மாசமே அந்த அம்மா 3 பஸ்ல ஆள கூட்டிட்டு வந்து பனையூர்ல பிரச்னை பண்ணுச்சு. அப்பவே ரெண்டு தரப்பையும் உட்கார வச்சு பேசியிருக்கணும். இல்லனாலும் ஒரு வருசம் டைம் இருந்திருக்கு. இடையில ரெண்டு தரப்பை பத்தியும் விசாரிச்சு ஒரு முடிவு எடுத்து சுமூகமா முடிச்சு விட்ருக்கணும். ஆனா, பொதுச்செயலாளர் எதையுமே பண்ணாம தூத்துக்குடி ஃபைல அப்டியே கிடப்புல போட்டுட்டாரு. 'நான் சொல்றேன்ல கேளு...'னு கண்ண உருட்டி ரசிகர் மன்றம் மாதிரியே கட்சியையும் நடத்த பார்க்குறாரு' என தலைமைக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள் சிலரே முணுமுணுக்கின்றனர்.
நேற்று தூத்துக்குடி மட்டும் பஞ்சாயத்து அல்ல. திருத்துறைப்பூண்டியிலிருந்தும் ஒரு 100 நிர்வாகிகள் புகார் கொடுக்க வந்திருந்தனர். 'வேலை பார்த்த ஆளுக்கு மா.செ பதவி போடாம வெளிநாட்டுல இருந்து வந்த பாரதிங்ற ஆளுக்கு பதவி கொடுத்துருக்காங்க. தலைமையோட முடிவு. அதுக்கு நாங்க பணிஞ்சு போறோம். ஆனா, அந்த பாரதி மாவட்டத்துக்குள்ள உழைச்சவங்களுக்கு பதவி போடாம அவருக்கு தோதுவான ஆளுகளுக்கு பதவி போட்டுட்டு இருக்காரு. இதை ஒரு 20 தடவை பொதுச்செயலாளர்க்கிட்ட புகாரா சொல்லிட்டோம். 'போ...பார்த்துக்குறேன்'னு சொல்றாரே தவிர எதுவும் செய்யல. அதான் கூட்டமா திரண்டு வந்து தளபதிக்கிட்டேயே புகார் கொடுக்கலாம்னு வந்தோம்' என்கின்றனர் வேதனையாக.

தூத்துக்குடியில் 6 தொகுதிகள். அதில் 5 தொகுதிகளுக்கு மட்டுமே மா.செ பதவி போடப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தை டீலில் விட்டுவிட்டார்கள். அஜிதா பஞ்சாயத்தை மாதிரியே அங்கேயும் ஒரு பஞ்சாயத்து புகைந்து கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பிரச்னையான இடங்களில் கை வைக்க வேண்டாமென்றுதான் ஸ்ரீவைகுண்டத்தை நேற்று தொடாமல் இருந்திருக்கிறது ஆனந்த் தரப்பு.
அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதிக்கும் நேற்றுதான் மா.செவை அறிவித்தார் விஜய். அவர் உள்ளே அருள்ராஜ் என்பவரை மா.செவாக அறிவிக்கும் போதே வெளியே ஒரு கும்பல் கொடிபிடித்தது. 'எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தரேன் 10 கோடி கொடுங்கன்னு தொகுதியில கட்சி பேரை நாசமாக்கிட்டு இருக்க ஆளுக்கு போஸ்டிங்கா...' என கொந்தளித்தனர்.
இதெல்லாம் சென்னைக்கு வெளியே. சென்னைக்குள் இன்னும் உக்கிரமாக பற்றியெரிந்து கொண்டிருக்கிறது கோஷ்டி பூசல். திருவொற்றியூர் தொகுதிக்கான மா.செ ஆர்.கே மணி. ஆனால், இவர் முழுக்க முழுக்க ஆர்.கே.நகரில் வேலை பார்த்தவர். அவரை திருவொற்றியூரில் மா.செ ஆக்கி, எஸ்.ஏ.சியின் ஆதரவாளர்களாக இருந்த சீனியர்களை ஆனந்த் ஓரங்கட்டுவதாக புலம்புகின்றனர் லோக்கல் நிர்வாகிகள்.
8 மாதத்துக்கு முன்பாகவே விஜய்யின் காரை சேஸ் செய்து இதுகுறித்து புகார் கொடுக்க முனைந்தது ஒரு டீம். அவர்களையும் அழைத்து, 'நான் சொல்றேன்ல போ...' என டெம்ப்ளேட்டாக அதட்டி அனுப்பியிருக்கிறார் ஆனந்த். தொகுதிக்குள் எந்த கட்சி நிகழ்ச்சியையும் நடத்தாமல் பெயருக்கு பூத் கமிட்டியை அமைத்து தலைமையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆர்.கே.மணிக்கு எதிராக விரைவில் கொடிபிடிப்போம் என்கிறது ஒரு டீம். ஆர்.கே.நகர் மா.செ சுறா வேலு முறையாக போஸ்டிங் போடவில்லை என ஒரு டீம் கொடிபிடித்து இப்போதுதான் காரியம் சாதித்திருக்கிறது. 'உழைச்சவங்களுக்கு பதவியே கொடுக்காம, ஆதவ் படத்தை போஸ்டர்ல போட்டோம்னு சப்பை காரணம் சொல்லி கட்சியை விட்டு ஒதுக்குறாங்க' என ஆவடி தொகுதியை கையில் வைத்திருக்கும் ஆவடி மணிக்கு எதிராக ஒரு கோஷ்டி சீறுகிறது.

மாதவரம் நீண்ட காலமாக வேலை பார்த்த இளங்கோவுக்கு மா.செ பதவி கொடுக்காமல் ML பிரபு என்பவருக்கு போஸ்டிங் போனதில் இளங்கோ தரப்பு டென்ஷனில் இருக்கிறார்கள். வடசென்னைக்கு செல்ல வேண்டிய தேதியை மாற்றிதான் விஜய் கரூருக்கு சென்றார். விஜய் திட்டமிட்டப்படி சென்னையிலேதே பிரசாரம் செய்திருந்தால் அன்றைக்கே விஜய்யின் பேருந்து முன்பு உட்காந்திருப்போம் என்கின்றனர் இளங்கோ டீம். சென்னை துறைமுகம் அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி. அந்தத் தொகுதியிலும் இருதரப்புக்கும் மோதலால் இன்னும் போஸ்டிங் போடவில்லை.
இப்படி தவெகவின் கோஷ்டி பூசல் பட்டியலை எடுத்தால் அது நீண்டுகொண்டே போகும். 'மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது தினசரி பஞ்சாயத்து என எதோ ஒரு கும்பல் அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறது என்று பொதுச்செயலாளர் குறைபட்டுக் கொள்கிறார். ஆனால், நாங்கள் எடுத்து வரும் பஞ்சாயத்துகளை அவர் காது கொடுத்தே கேட்பதில்லையே? தீர்வு கிடைத்தால் ஏன் தினசரி ஒரு கும்பல் அலுவலகம் நோக்கி வரப்போகிறது. தளபதிங்ற ஒரு ஆளுக்காகதான் இப்பவும் பொறுமையா போறோம்' என வேதனைப்படுகின்றனர் புகார் வாசிக்கும் நிர்வாகிகள்.

அஜிதா பனையூர் அலுவலகம் வெளியே களேபரம் செய்து கொண்டிருக்க சி.டி.ஆரையும் ராஜ் மோகனையும் அனுப்பி அவரிடம் பேசுவது போல பேச வைத்து திசைதிருப்பி இன்னொரு பக்கமாக காரை கிளப்பி சென்றுவிட்டார் விஜய். அஜிதா முன்கேட்டில் இருப்பதை அறிந்து பின்கேட் பக்கமாக புறப்பட்டு சென்றார் ஆனந்த். நிர்வாகிகள் இதைத்தான் பிரச்னை என்கின்றனர். எதாவது பஞ்சாயத்து என வந்து நின்றால் தலைவரும் பொதுச்செயலாளருமே ஓடினால் எங்கு சென்று முறையிடுவது? கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளை களையாமல் கோட்டையை மட்டும் எப்படி பிடிப்பது என குமுறுகின்றனர். கவனிப்பாரா விஜய்?














