கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடி...
குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 9 - நாள்களுக்கு முன்பு விஜய்யும் யுவஸ்ரீயும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். சம்பவத்தன்று யுவஸ்ரீக்கு அவரின் சகோதரி போன் செய்தார். ஆனால் யுவஸ்ரீ போனை எடுக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்டளைக்கு வந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் யாரும் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் ஓனருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வீட்டின் ஓனர், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெட்டில் யுவஸ்ரீ உயிரிழந்து கிடந்தார். விஜய், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 9-வது நாளில் விஜய்யும் யுவஸ்ரீயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில், ``சடலமாக கிடந்த யுவஸ்ரீயின் அருகில் தலையணை ஒன்று இருந்தது. ஆனால் அவரின் உடலில் காயங்கள் இல்லை. அதனால் யுவஸ்ரீ எப்படி இறந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் தெரியவரும். அதே நேரத்தில் விஜய், தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார். புதுமண தம்பதியான விஜய்க்கும் அவரின் மனைவி யுவஸ்ரீக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

















