"என் எல்லா சொத்தையும் ஏமாத்திட்டாங்க"- கண்கலங்கிய நடிகை காஞ்சனா - அதிர்ச்சியில் ...
வாழைக்குலை அறுவடை செய்யும் கருவி, மஞ்சள் விதைக்கும் கருவி... ஈரோட்டில் களைகட்டிய கருத்தரங்கு
`வாழை+ மஞ்சள் சாகுபடி... லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் பசுமை விகடன் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நடைபெற்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வை, தி அக்ரி வேர்ல்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சத்யம் அக்ரோ கிளினிக், எச்.டி.எஃப்.சி பேங்க், நன்னீர் (என்.பி) டிரிப் இர்ரிகேஷன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை வழங்கியிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த விவசாயிகளை ஈரோடு-பெருந்துறை பிரதான சாலையில் உள்ள வேப்பம்பாளையத்திலிருந்து கல்லூரிக்கு அழைத்து வர பிரத்யேக வேன் வசதி கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் தி அக்ரி வேர்ல்டு, சத்யம் அக்ரி கிளினிக், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, விகடன் பிரசுரம் உள்ளிட்டவை அரங்குகளை அமைத்திருந்தன.

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த விவசாயிகளை வரவேற்றனர். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் துணைத்தலைவர் குமாரசுவாமி, கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து சத்யம் அக்ரி கிளினிக் சார்பில் நினைவுப் பரிசுகள் பேச்சாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மதுரை மீனாட்சி சிற்பம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

முதலில் உரையாற்றிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி பாக்யராணி வாழை சாகுபடியில் தேர்ந்தெடுக்க வேண்டிய பல்வேறு ரகங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் அழகேசன் பேசியபோது, "பசுமை விகடனோடு இணைந்து ஆரம்பம் முதலே பயணித்து வருகிறோம். வாழை, மஞ்சள் சம்பந்தமாக பல பயிற்சிகளை நடத்தி வருகிறோம். வாழைத்தார் அறுவடை செய்யப்பட்ட வாழை மரத்திலிருந்து நாரைப் பிரித்தெடுத்து, பலவிதமான கைவினைப் பொருள்கள், தயாரிக்க பயிற்சி கொடுக்கிறோம். வாழை, மஞ்சள் பயிர்களைத் தாக்கும் நோய்களை தீர்க்க பலவிதமான ஆலோசனைகளை எங்கள் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வழங்கி வருகிறோம்" என்றார்.

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், வாழை மற்றும் மஞ்சள் சாகுபடியில் நவீன கருவிகளின் பயனை விளக்கினார். “விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டுமென்றால் கருவிகள் மிக மிக அவசியம். வாழைக்கு குழி தோண்டும் கருவி, கட்டை சீவும் கருவி, வாழை மரத்தில் மருந்து செலுத்தும் கருவி, துல்லிய உரம் இடும் கருவி, வாழைக்குலை அறுவடை செய்யும் கருவி, அறுவடை செய்யப்பட்ட வாழை மரத்தைத் தூளாக்கும் கருவி.
வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி, சாறு எடுக்கும் கருவி, வாழைநார் கயிறு திரிக்கும் கருவி. மஞ்சள் விதைக்கும் கருவி, அறுவடை கருவி, மஞ்சளை வேகவைக்கும் களங்கள், மஞ்சளை கழுவும் கருவி, சோலார் டன்னல் என்று வாழை, மஞ்சளுக்கு பலவிதமான கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகள் எங்கள் நிறுவனத்தை அணுகினால் அவற்றின் விலை, அவை எங்கு கிடைக்கும் என்ற விவரத்தை சொல்வோம். கருவிகள் வேலையை எளிதாக்கி லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும்” என்றார்.
ஈரோட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி சண்முகசுந்தரம் பேசியபோது, "நான் செய்கிற வாழை விவசாயத்தில் மரங்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருக்கும். இதன்மூலம் வருடமெல்லாம் தொடர்ச்சியான மகசூல் பார்க்கலாம். ஒரு ஏக்கருக்கு 3,000 தார்கள் அறுவடை செய்யலாம். நான் பின்பற்றுகிற மேட்டுப்பாத்தி முறை நாட்டு ரகங்களுக்கு மிகவும் ஏற்றது. 25 ஆண்டுகள் தொடர்ந்து இந்த முறையில் மாற்றமின்றி மகசூல் எடுக்கலாம்" என்றார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சக்திவேல், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயபாஸ்கரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரியா உள்ளிட்டோர் பேசினார்கள்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் விவசாய கடன் பிரிவு தலைவர் பிரபாகரன் மற்றும் கருங்கல்பாளையம் கிளையின் மேலாளர் திருப்பதி ஆகியோர் ஹெச்.டி.எஃப். சி வங்கி வழங்கிவரும் கடன் வசதிகள் குறித்துப் பேசினார்கள். தேனியைச் சேர்ந்த நன்னீர் வளம் நிறுவனத்தின் தலைவர் சி.பகீரதன் உப்பு பிரித்தெடுக்கும் கருவி குறித்துப் பேசினார்.
மதிய உணவாக கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் இனிப்புப் பொங்கல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், போண்டா என்று சுவையான உணவு வழங்கப்பட்டது.
காலை தேநீரோடு வெண்கொண்டைக்கடலை சுண்டலும், மாலை தேநீரோடு சிறுதானிய பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்பட்டன.















