செய்திகள் :

உங்க பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு... முதலில் என்ன செய்ய வேண்டும்?சட்டம் சொல்வது என்ன? - 17

post image

உங்கள் பெயர்… உங்கள் புகைப்படம்… உங்கள் நண்பர்கள்… ஆனால், அந்தக் கணக்கிலிருந்து வரும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் நீங்கள் இல்லை!

இணையதளத்தில் அல்லது சமூக வலைத்தளத்தில், உங்கள் பெயரில் யாரோ போலிக் கணக்கு தொடங்கி, நண்பர்களிடம் பணம் கேட்கிறார்கள். சிலரிடம் உங்களைப் போலவே பேசித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். இன்னும் சிலர், அதே கணக்கிலிருந்து ஆபாசமான மெசேஜ்களையும் மிரட்டல்களையும் அனுப்புகிறார்கள்.

நாளை உங்கள் நண்பர் ஒருவர், “நீங்கதானே என்கிட்ட பணம் கேட்டீங்க? இப்போ ஏன் இல்லைன்னு சொல்றீங்க?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் உங்களுக்கே தெரியாமல் இன்னொருவர் பயன்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கணக்கை முடக்க முடியுமா? சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

இதுபோன்ற போலிக் கணக்கைக் கண்டறிந்தவுடன், அந்தக் கணக்கு உங்களுடையது அல்ல என்பதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் பெயரில் பணம் கேட்டால் என்ன செய்வது?

உதாரணமாக, உங்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒருவர் உங்கள் நண்பரிடம், “அவசரமாக ₹5,000 அனுப்புங்கள்” என்று மெசேஜ் அனுப்புகிறார் என வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பர் பணம் அனுப்பிவிட்டால், பண இழப்பு அவருக்கு; உங்கள் பெயருக்குக் களங்கம்!

எனவே, சந்தேகத்துக்குரிய மெசேஜ் வந்தால் உடனே பணம் அனுப்ப வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த தொலைபேசி எண்ணில் உங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தச் சொல்லுங்கள்.

சட்டம் சொல்வது என்ன?

ஆள்மாறாட்டம்… சட்டம் என்ன சொல்கிறது?

மற்றொருவரைப் போல நடித்து ஏமாற்றுவது ஆள்மாறாட்டம் (Impersonation). தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 66D-ன்படி, கணினி அல்லது தகவல் தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஒருவரை ஏமாற்றினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 319(1)-ன்படி, மற்றொருவரைப் போல நடித்து அவரை ஏமாற்றுவது 'Cheating by Personation' எனப்படும். இதற்கான தண்டனை பிரிவு 319(2)-ன்படி, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.

ஆனால், ஒருவரின் பெயர் அல்லது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலிக் கணக்கு தொடங்கிய ஒவ்வொரு நிகழ்விலும் இந்தப் பிரிவுகள் தானாகப் பொருந்தாது. அந்தக் கணக்கைப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றியுள்ளார்களா, பணம் பெற்றுள்ளார்களா, ஏமாற்றும் நோக்கம் இருந்ததா போன்ற சம்பவத்தின் உண்மைகளையும் சட்டக் கூறுகளையும் பொறுத்தே குற்றம் தீர்மானிக்கப்படும்.

முதலில் என்ன செய்ய வேண்டும்?

ஆதாரங்களை அழிக்காதீர்கள்! போலிக் கணக்கின் ஸ்கிரீன்ஷாட்கள், இணைப்பு (URL), பயனர் பெயர், அனுப்பப்பட்ட மெசேஜ்கள் ஆகியவற்றைச் சேமியுங்கள். தேதி, நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள்.

போலிக் கணக்கின் Profile URL, User ID கிடைத்தால் அது, பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி, பணம் கேட்கப்பட்ட வங்கிக் கணக்கு அல்லது UPI விவரங்கள் ஆகியவற்றையும் சேமித்து வையுங்கள். அந்தக் கணக்கிலிருந்து வந்த மெசேஜ்களை அழிக்காமல் பாதுகாத்திடுங்கள்.

உங்கள் உண்மையான சமூக வலைதளக் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றி, Two-Factor Authentication வசதியையும் இயக்குங்கள். வேறு சாதனங்களில் உங்கள் கணக்கு திறந்திருந்தால் அவற்றிலிருந்து வெளியேறவும்(Log Out).

சமூக வலைதளத்துக்கும் பொறுப்பு இருக்கிறது!

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன்படி, மற்றொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் தகவல்களைப் பதிவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளின் Rule 3(2)(b)-ன்படி, மின்னணு வடிவிலான ஆள்மாறாட்டம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் 24 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை நீக்கவோ அல்லது அதற்கான அணுகலை முடக்கவோ தேவையான நியாயமான மற்றும் நடைமுறைசாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

சட்டம் சொல்வது என்ன?

எனவே, உங்கள் பெயரில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தின் Report / Impersonation வசதியைப் பயன்படுத்திப் புகார் அளியுங்கள். புகாரில் உங்கள் உண்மையான கணக்கு விவரங்களையும், போலிக் கணக்கின் இணைப்பையும், உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவையான விவரங்களையும் கொடுங்கள். புகார் அளித்ததற்கான எண்ணையும் அல்லது மின்னஞ்சல் உறுதிப்படுத்தலையும் பாதுகாத்து வையுங்கள்.

நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் Grievance Officer-ஐ அணுகலாம். பொதுவான குறைதீர்ப்பு நடைமுறையில் புகார் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளித்து, 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்ற விதியும் உள்ளது

*காவல்துறையில் புகார் கொடுக்கலாமா?*

நிச்சயமாக! https://www.cybercrime.gov.in/ இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கலாம். போலிக் கணக்கின் விவரங்களையும் சேமித்த ஆதாரங்களையும் புகாருடன் இணைக்கவும்.

பண இழப்பு ஏற்படவில்லை என்றாலும், உங்கள் பெயரில் போலிக் கணக்கு தொடங்கி மிரட்டல், ஆள்மாறாட்டம் அல்லது பிற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக இருந்தால் புகார் அளிக்கலாம். பணம் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, 1930 என்ற சைபர் நிதி மோசடி உதவி எண்ணையும் அணுகுங்கள்.

போலிக் கணக்கிலிருந்து உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பணம் அனுப்பி ஏமாந்திருந்தால், அவர்களும் தங்களுக்கேற்பட்ட பண இழப்பைப் பற்றி 1930-ல் புகார் அளிக்க வேண்டும்.

உங்கள் உரிமை என்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியுரிமை உரிமை, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் முக்கியமானது.தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதை Justice K.S. Puttaswamy (Retd.) v. Union of India (2017) வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உங்கள் அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதற்கெதிராகப் புகார் அளித்து உரிய சட்ட நடவடிக்கையைக் கோரலாம்.

நினைவில் வையுங்கள்: உங்கள் பெயரில் போலிக் கணக்கு இருந்தால் பயந்து அமைதியாக இருக்காதீர்கள். ஆதாரங்களைச் சேமியுங்கள்; புகார் கொடுங்கள். உங்கள் பெயரில் பணம் கேட்கப்பட்டால், பணம் அனுப்புவதற்கு முன் நேரடியாக உறுதிப்படுத்துங்கள்.உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அந்தப் போலிக் கணக்கு உங்களுடையது அல்ல என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் அடையாளம் உங்கள் உரிமை. இணையத்திலும் அதைப் பாதுகாக்கச் சட்டம் உங்களுக்குத் துணை நிற்கும்!

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. குறிப்பாக, தீபத்தூண் அமைந்துள்ள இடம் ய... மேலும் பார்க்க

கடன் வாங்கியவரை அவமானப்படுத்தலாமா? கடன் கொடுத்தவருக்கு என்னென்ன உரிமைகள்? சட்டம் சொல்வது என்ன? - 16

நண்பருக்கோ, உறவினருக்கோ நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுத்திருப்போம். ஆனால், திருப்பிக் கேட்டால் பதில் இருக்காது; போன் செய்தால் எடுக்க மாட்டார்கள். சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, “என் பணத... மேலும் பார்க்க

சர்ச்சையான நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பேச்சு:"இது ஜோதிடர்களின் வேலை"- எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்

பி சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிக... மேலும் பார்க்க

'’பெற்றோரைப் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகள்'' உத்தரவை மதிக்காவிட்டால்... | சட்டம் சொல்வது என்ன? - 15

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க… வயசான காலத்துல எங்களை யார் பார்த்துப்பாங்க?” என்று கண்ணீருடன் நிற்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். வயதான காலத்தில் உணவுக்கும் மருந்துக்கும் பிறரை எதிர்பார்க்கும் ப... மேலும் பார்க்க

கரூர்: போக்ஸோ வழக்கில் சிக்கிய குற்றவாளி; 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

கரூர் அருகே உள்ள வெங்கமேடு காவல் சரக்குக்கு உட்பட்ட ஒரு பகுதியில், சிறுமிக்கு அருகம்பாளையம், வையாபுரி கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலுசாமி (56) என்ற முதியவர் , சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ... மேலும் பார்க்க