டாஸ்மாக் கிடங்கு: 'மருத்துவத்துறை நிதி பயன்படுத்தப்படவில்லை.!'- மக்கள் நல்வாழ்வ...
ஆரணி: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர் படுகொலை - மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொடூரம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் `கட்டை’ குணா என்கிற குணசேகரன். இவர் மீது வனத்துறையில் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவியை பிரிந்த கட்டை குணா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மனிஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த கட்டை குணா இன்று அதிகாலையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவரது கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததுபோல சம்பவத்தின் நிகழ்வு காட்டுகிறது. ஏனெனில், சம்பவம் நடைபெறும் சமயத்தில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கட்டை குணாவை வெட்டி சாய்க்கும்போது, சுதாரித்து எழுந்துகொண்ட அவர் பதில் தாக்குதலிலும் ஈடுபட்டதாக தெரியவருகிறது. ஆனாலும், அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் கட்டை குணா பலத்த வெட்டு காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும், பெரணமல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டை குணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து வினோத் என்பவரை பிடித்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா? எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



















