Shriram Finance-ல் Japan நிறுவன முதலீடு, ஏன்? | Silver Gold | IPS Finance - 392
"உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் கொள்ளு பேரனாக திகழ்ந்து வருகிறார்!" - அமைச்சர் அன்பில் மகேஸ்
திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய அவர்,
"தந்தை பெரியாரின் கொள்ளு பேரனாக திகழ்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிட சித்தாந்தத்தை காக்கக்கூடிய வேலாகவும், அது ஆரியம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க என்று சொன்னால் அதை வீழ்த்தக்கூடிய வேலாகவும் ஊடகத்தில் உரையாற்றி வருகின்ற செந்தில் வேலை வரவேற்போம். இன்று உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு 48 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முடிவு செய்யப்பட்டு, அதில் 45 -வது நிகழ்வாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் அரசங்குடி ஊராட்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த வடக்கு ஒன்றியத்திற்கு 2021 முதல் 2026 -ம் ஆண்டு வரை முதல் சாலை வசதி, வடிகால் வசதி, பள்ளி வகுப்பறை கட்டுதல், ஸ்மார்ட் கிளாஸ் அமைத்தல், உரக்கிடங்கு கட்டுதல், நியாய விலை கடை கட்டுதல் என ரூ.18.96 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கின்றேன்.

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய அரசியல் சூழ்நிலையில் கொள்கை சார்ந்த ஒரு இளம் தலைவராக, திராவிட இயக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் தான் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவர் பெரியாரின் கொள்ளு பேரனாக திகழ்ந்து வருகிறார். இன்று எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வில் இரண்டு விரல்களை காட்டினால், ஒன்று எடப்பாடிக்கு, மற்றொன்று எடப்பாடியின் உறவினர்களுக்கு வந்த ரெய்டு தான். எனவே, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழக முதல்வரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வரும் 2026 - ம் வருடம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் தமிழக முதல்வரை அரியணை ஏற்ற அயராத பாடுபடுவோம்" என்றார்.















