'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' - மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்த...
உத்தரப் பிரதேசம்: பிறந்தநாள் பார்ட்டியில் கேக்கை முகத்தில் தடவியதால் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் அங்குள்ள ஜிம் ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்தப் பார்ட்டிக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஜிம்மிற்கு அடிக்கடி வரக்கூடிய முக்கியமானவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தப் பிறந்தநாள் பார்ட்டி அதிகாலை வரை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டினர்.
அதனைத் தொடர்ந்து கேக்கை எடுத்து ஒருவர் முகத்தில் ஒருவர் தடவியதாகத் தெரிகிறது. விழாவில் ஜிதேந்திர குமார் என்பவரும் கலந்து கொண்டார். அவர் தனது முகத்தில் கேக்கைத் தடவ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி அமர்தீப் மற்றும் மணீஷ் ஆகியோர் கேக்கை முகத்தில் தடவியதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜிதேந்திர குமார் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கியுடன் வந்தார். அவர் வந்தவுடன் அமர்தீப் மற்றும் மணீஷ் ஆகியோரை மிகவும் அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சம்பவ இடத்தில் நின்ற ஆகாஷ் என்பவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனால் அவரை விரட்டிச்சென்று துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஜிம்மில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்துக்கொண்டு ஜிதேந்திர குமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
காயம் அடைந்த மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அதற்குள் இறந்துவிட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஜெயின் கூறுகையில், ''சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிம் உரிமையாளர் ருபேஷ் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றார்.
மணீஷ் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு பேரும் விவசாயிகள் ஆவர். இவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் கவுன்சிலர் ஒருவரின் உறவினர்கள் ஆவர்.



















