"அந்தச் சிறுவனுக்கு எவ்ளோ அசை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு" - சின்ன தமிழாவை...
5 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 5 மரண தண்டனை; சிவகங்கையை அதிர வைத்த போக்சோ வழக்கு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர் சந்திரன் (49). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு சாதாரண குடும்பஸ்தனாக வலம் வந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து தனது வக்கிர முகத்தைக் காட்டியிருக்கிறார்.
அந்தப் பகுதியில் உள்ள 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு வீடியோ கேம்களைக் காட்டியும், தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தும், செலவுக்கு 20 ரூபாய் பணம் கொடுத்தும் ஆசை காட்டியிருக்கிறார்.
இப்படி ஆசை வார்த்தை கூறி 5 சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை தைரியமாக முன்வந்து புகார் அளிக்க, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து களத்தில் இறங்கினர்.
கடந்த 2024 பிப்ரவரி 13-ம் தேதி சந்திரனைக் கைது செய்த போலீஸார், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தையும் பாய்ச்சினர். விசாரணையில் அவர் மொத்தம் 5 சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தனலட்சுமி இந்த வழக்கை மிக வலுவாகக் கொண்டு சென்றார். ஏப்ரல்-24 இல் இந்த வழக்கில் நீதிபதி கோகுல் முருகன் பரபரப்பு தண்டனைகள் வழங்கி தீர்ப்பளித்தார்.
12 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 5 தனித்தனி தூக்குத் தண்டனைகளும் மற்ற 4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சாகும் வரை சிறையில் இருக்க வேண்டிய 4 தனித்தனி ஆயுள் தண்டனைகளும், ஒரு சிறுமியை வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டு சிறையும், சிறுமிகளை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கும் தமிழக அரசு தலா 7 லட்சம் ரூபாய் (மொத்தம் 35 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு எழுதி முடித்ததும், வழக்கமான நடைமுறைப்படி தனது பேனா முனையை உடைத்து வீசினார் நீதிபதி. சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வழக்கில் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர காவல் துறையின் துணையுடன் பெரும் சட்டப்போர் நடத்திய அரசு வழக்கறிஞர் வி.ஆர்.தனலட்சுமி நம்மிடம்,
"இந்தத் தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பிஞ்சு குழந்தைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதி. சாக்லேட் கொடுத்தும், மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடக் கொடுத்தும் அந்தப் பிஞ்சுகளை ஆசை காட்டி ஏமாற்றித் தனது வக்கிரத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் இந்தக் குற்றவாளி.
அந்தக் குழந்தைகளுக்குத் தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய 'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகுதான், ஒரு சிறுமி தைரியமாகத் தனது பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். அங்கிருந்துதான் இந்த நீதிக்கான போராட்டம் தொடங்கியது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசும்போது, 'இது உங்களது தவறல்ல' என்று அவர்களுக்குப் புரியவைத்து, கவுன்சிலிங் மூலம் அவர்களைத் தேற்றினோம். சிவகங்கை நீதிமன்ற வரலாற்றிலேயே போக்சோ வழக்கில் வழங்கப்படும் முதல் மரண தண்டனை இதுதான்.
இனிமேல் இது போன்ற குற்றத்தைச் செய்ய நினைப்பவன் பத்து முறை யோசிக்க வேண்டும். இந்தத் தண்டனை மூலம் ஒருவன் பயந்தால் கூட, சமூகத்தில் பல குழந்தைகளின் எதிர்காலம் காப்பாற்றப்படும்.

காவல்துறையின் மிக வேகமான விசாரணையும், நீதிமன்றத்தின் மேலான ஒத்துழைப்புமே இந்த நீதியை இரண்டு ஆண்டுகளுக்குள் சாத்தியமாக்கியுள்ளது. இது அநீதி இழைக்கும் காமக் கொடூரர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரண அடி!" என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.



















