உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்று டிராவில் முடிந்தது!
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.
14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்தத் தொடரின் முதல் சுற்றில் குகேஷ் தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்று டிராவிலும், மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றியும் பெற்றிருந்தார். நேற்று (நவ. 29) நடைபெற்ற 4-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. தொடர்ந்து, இன்று நடைபெற்ற 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது.
ஆட்டத்தின் போது ஒரு நகர்த்தலில் குகேஷ் தனது யானையை (ரூக்) வைத்து லிரெனின் மந்திரியை (பிஷப்) வெட்டாமல் சிப்பாயை (பான்) வைத்து வெட்டினார். இது லிரெனுக்கு சாதகமாக மாறியது.
ஆனால், அடுத்தடுத்த நகர்வுகளில் சமயோசிதமான முறையில் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிராவுக்கு கொண்டு சென்றார். இதில் லிரென் சற்றே ஏமாற்றமடைந்தார். 40 நகர்வுகளில் ஆட்டம் முடிவடைந்தது.
இதையும் படிக்க | உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 4-வது சுற்று!
இந்தத் தொடரில் குகேஷ் வெள்ளைக் காய்களில் விளையாடி டிரா செய்தது இது முதல்முறை.
ஐந்து போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 2.5 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.
6-வது போட்டி நாளை (டிச. 1) நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2.30 மணியளவில் நேரலை ஒளிபரப்பாகும்.