ஒரே ஒரு ரெட் கார்டு; 60,000 இலவச பீட்சாக்கள் - அமெரிக்க வீரரின் தவறால் ரசிகர்களு...
உள்துறை அமைச்சரை சந்திக்க ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற CPM முன்னாள் அமைச்சர்; குவியும் புகார்!
கேரள தேவஸ்வம்போர்டு முன்னாள் அமைச்சரும், சி.பி.எம் முக்கியத் தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஸ்கூட்டரில் சென்றார். இந்தச் சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் இருவரும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சமயத்தில் அமைச்சரின் இல்லத்தில் பொதுமக்களும் மற்றும் பல பார்வையாளர்களும் இருந்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் சந்திப்பின் நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "சில சாதாரணப் பரிந்துரைகளுக்காக வந்தேன்" என்று சுருக்கமாகக் கூறினார். ஆனால், உள்துறை அமைச்சரிடம் அவர் என்ன பரிந்துரை செய்தார், என்ன விவாதித்தார் என்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தங்கக் கொள்ளை வழக்கை சிறப்பு விசாரணைக்குழு (எஸ்.ஐ.டி) தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்த விசாரணை மிக முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ள தற்போதையச் சூழலில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேவஸ்வம் போர்டு முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறைக்குப் பொறுப்பான ஆளுங்கட்சி உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசியல் சர்ச்சை ஒருபுறமிருக்க, கடகம்பள்ளி சுரேந்திரன் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் அமைச்சரின் வீட்டிற்கு வரும் காட்சிகளும், அதேபோலத் திரும்பிச் செல்லும் காட்சிகளும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவின. ஒரு முன்னாள் அமைச்சரே போக்குவரத்து விதியை மீறி, அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சரின் வீட்டிற்கே ஹெல்மெட் இல்லாமல் சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, விஐபிக்களுக்கு ஒரு நீதியா? மோட்டார் வாகனத் துறை இவருக்கு அபராதம் விதிக்குமா?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது போக்குவரத்து விதிமீறலின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, வட்டியூர்க்காவு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், மாநிலப் போக்குவரத்து ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான குளத்தூர் ஜேம்ஸ் என்பவர், இந்த விதிமீறல் குறித்து மாநில முதல்வர் வி.டி.சதீசனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது விரைவில் நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.















