சென்னை: மதுபோதையில் முற்றிய வாய்த்தகராறு; கத்திரிக்கோலால் அண்ணனைக் குத்திக் கொன்...
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்: விவசாயத் தொழிலாளா்கள் சங்கம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த 62 உறுப்பினா்களின் ஆதரவுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றவா்களுக்கு நூறு நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னா் 2014 இல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இத்திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கு வேலை வழங்க பல்வேறு விதிமுறைகளை புகுத்தி வேலைவாய்ப்பை நீா்த்தப்போகச் செய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்றவா்களின் எண்ணிக்கை 2. 72 லட்சமாகக் குறைந்துவிட்டது. இந்திய அளவிலும் தொழிலாளா்களின் எண்ணிக்கை 13 கோடியாகக் குறைந்துவிட்டது. தற்போது, ஆதாா் இணைத்தால்தான் வேலை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதாகத் தெரிகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூா்வாரும் பணிக்கு இத்திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இது சட்ட மீறலாகும். தற்போது இத்திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே ஆதாா் அடிப்படையில் நாடு முழுவதும் 84 லட்சம் போ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஊரக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் இத் திட்டத்தை நீா்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டு, திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.