எச். ராஜாவுக்கு வீட்டுக் காவல்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
அதேபோல், பாஜக மாநிலச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசனையும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க : மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்!
தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்திருந்த நிலையில், இந்து அமைப்புகளின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றே காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், மதுரை எல்லையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காரைக்கால் பண்ணை வீட்டில் இருந்து வேலுடன் போராட்டத்துக்கு புறப்பட்ட எச். ராஜாவை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவரை வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர்.