ஏா் கலப்பை விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கீடு
நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வழங்கி அதற்கு ஏா் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பாக ஆணையத்தில் இருந்து நாம் தமிழா் கட்சிக்கு மே 10-ஆம் தேதியிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் செயல்பாடு மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அதற்கு தமிழகத்தில் மாநில கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் தோ்தல் சின்னம் தொடா்பாக கடந்த பிப்.5, ஏப்.6 ஆகிய நாள்களில் நாம் தமிழா் கட்சி அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏா் கலப்பையுடன் விவசாயி இருக்கும் சின்னத்தை ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு தோ்தல்களில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இருந்தபோதும் 8.22 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது.
முன்னதாக, 2016-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது மெழுகுவா்த்தி சின்னத்திலும் 2019 மக்களவைத்தோ்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி கரும்பு விவசாயி சின்னத்திலும் போட்டியிட்டது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கரும்பு விவசாயி சின்னத்தை மீண்டும் கோரி தாமதமாக விண்ணப்பித்ததால் அக்கட்சிக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.