John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் ட...
மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?
மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
2025 பிப்ரவரியில் விதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, இந்த ஆண்டு பிப்ரவரியில் நீக்கப்பட்ட போதிலும், அவ்வப்போது நிகழும் வன்முறைகள் அமைதி முயற்சிகளைத் தோல்வியடையச் செய்கின்றன.
கொல்லப்பட்ட குழந்தைகள்
பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள திரொங்லாபி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 7 அன்று நடந்த குண்டுவெடிப்பில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனும், ஆறு மாதக் குழந்தையும் உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் தாய் காயமடைந்தார்.
இந்தக் குண்டுவெடிப்பைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஐந்து நாள் போராட்டத்தைத் தொடங்கிய 'மீரா பைபிஸ்' என்ற பெண்கள் குழு, முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
போராட்டம் - கடையடைப்பு
அதனால், மெய்தி இனத்தவர் அதிகம் வாழும் ஐந்து மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் முடங்கின. இம்பால் பள்ளத்தாக்கின் உரிபோக் மற்றும் நாகரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் சி.ஆர்.பி.எஃப் (CRPF) முகாம் அருகே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
உக்ருல் மற்றும் சேனாபதி உள்ளிட்ட நாகா இனத்தவர் வாழும் பகுதிகளில் ஐக்கிய நாகா கவுன்சில் மூன்று நாள் முழு அடைப்பைத் தொடங்கியது. ஏப்ரல் 18 அன்று இம்பாலில் இருந்து சென்ற 'பொதுமக்கள் வாகன அணிவகுப்பு' மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல்களைக் கண்டித்து மணிப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கைதெம் மணி பேசுகையில், ``பிஷ்ணுபூர் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், போராட்டக்காரர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். NIA விசாரணை மட்டுமே போதாது," என வலியுறுத்தினார்.
மணிப்பூர் முதல்வரின் உரை
மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இம்பால் எம்.பி. பிமோல் அகோய்ஜம், ``கடந்த மூன்று ஆண்டுகளாக மணிப்பூர் கொந்தளிப்பாகவே உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் மக்களை அமைதிப்படுத்த போதுமானதாக இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள வாங்ஜிங்கில், வட்டார வளர்ச்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்க மணிப்பூர் முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங் இம்பாலில் இருந்து சாலை வழியாகச் செல்ல முயன்றார். அந்த வாகன அணிவகுப்பை போராட்டக்காரர்கள் மறித்தனர்.
இதனால், பயணத் திட்டத்தை மாற்றிய முதல்வர், ஹெலிகாப்டர் மூலம் விழாவில் கலந்துகொண்டார். அப்போது, பேசிய முதல்வர் சிங், ``மலை மாவட்டங்களுக்குச் செல்ல எனக்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில், பள்ளத்தாக்குப் பகுதியில் எதிர்ப்பு எழுவது ஆச்சரியமளிக்கிறது. அனைத்துப் பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்.
தேவையற்ற முழு அடைப்புகள் பொதுமக்களிடையே குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி கற்கள் மற்றும் கவண்களுடன் ஒரு பெரிய கும்பல் முன்னேறியது.
காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் கூட்டம் கலைந்து செல்லாமல் ஆக்ரோஷமாக முன்னேறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பொதுச் சொத்துக்களுக்கும், அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மெய்தி இனத்தவர் வாழும் பள்ளத்தாக்கு பகுதிகளில் "பொது அடைப்பு" அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை மீறி முதல்வர் அரசு விழாவில் பங்கேற்றதே போராட்டக்காரர்களின் கோபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இதனால் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.














