பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards
ஓபிஎஸ் மீது விமர்சனம்; தவெக முகாமில் ஐக்கியம்? - அதிமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கும் புகழேந்தி?
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவு அதிமுக நிர்வாகிகளை த.வெ.க-வுக்கு கூட்டிச் செல்ல பெங்களூரு புகழேந்தி தயாராகி வருவதாகத் தகவல்கள் பரபரக்கின்றன.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் தவெக-வில் இணைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை, பிடிக்காமல் முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். அதிமுக-வில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்ளிட்டோரும் சமீபத்தில் திமுக-வில் இணைந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் ஐக்கியமானார்.
இந்த நிலையில் 'எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் இருக்கும் வரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மாட்டேன்' என்று தொடர்ந்து பேசி வந்த டி.டி.வி.தினகரன், நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் கூட்டணியில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எந்தவொரு அரசியல் நிலைப்பாடும் எடுக்க முடியாமலும் ஓ.பி.எஸ்-ஸும், சசிகலாவும் தனித்து நிற்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரின் நடவடிக்கையால் ஒதுஙகி நிற்கும் அதிமுக நிர்வாகிகளை தவெக-வுக்கு அழைத்துச் செல்ல பெங்களூர் புகழேந்தி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் கர்நாடக மாநில அதிமுகச் செயலாளராகவும் பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்தும் வந்த வழக்கறிஞர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவாளராகி பின்பு தினகரனுடன் பயணித்து, கருத்து வேறுபாட்டால் பின்பு எடப்பாடி பழனிசாமி அதரவாளராகி, அங்கிருந்து விலகி ஓ.பி.எஸ் அணியில் பயணித்து வந்த நிலையில்தான், தற்போது தவெக-வில் சேர முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஓசூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததை கடுமையாக விமர்சித்து பேசிய புகழேந்தி, தான் தவெக-வுக்கு செல்ல உள்ள தகவலை சூசகமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி, அதிமுக இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். அவர் சோர்வடைந்துவிட்டார், பாஜக-வை விட்டு ஓபிஎஸ் வெளியே வர மாட்டார், எம்.ஜி.ஆர் ஆரம்பித்து ஜெயலலிதா தலைமை தாங்கிய கட்சி பாஜக-தான் என்பதுபோல் அவர் இருக்கிறார்.
ஓ.பி.எஸ் ஆகட்டும், கட்சியை அடமானம் வைத்த இ.பி.எஸ் ஆகட்டும், இதோ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறேன் என்று வந்த இன்னொரு அம்மாவாகட்டும், பெங்களூரு சிறை, திகார் சிறை வரைக்கும் கூடவே பயணித்து என்னால் இன்று அரசியல் வானில் பறந்துகொண்டிருக்கும் ஒருவர்(தினகரன்) இன்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டார்.
சசிகலா சிறைக்கு சென்றபோது ஒப்படைத்துவிட்டு சென்ற ஆட்சி ஆதிகாரம், கட்சி அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பிடுங்கிக் கொண்டபோது அதை காப்பாற்றிக் கொள்ள திறமை இல்லாதவர், இப்போது அவருடனே இணைந்துவிட்டார்.

இந்த நான்கு பேருமே பாஜக-வின் அடிமைகள், பாஜக-வும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இவர்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜக காலில் விழுந்துவிட்டார்கள். இதை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றவர், "இன்னும் 10 நாள்களில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை நான் கொண்டாடுவேன்" என்று சூசகமாகத் தெரிவித்தார்.
அவர் மட்டுமன்றி, அதிமுக-வில் அதிருப்தியில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தவெக-வுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகச் சொல்லப்படுகிறது.



















