Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதிய...
"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அறப்போர் இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தியிருந்தனர்.

'தமிழ்நாடு அரசே திமுக அரசே எங்கள் ஓட்டு இனிக்குதா? எங்களின் நலன்கள் கசக்குதா?' எனக் கோஷமிட்ட மக்கள் மேடையேறி தங்களின் குடியிருப்புகளில் நிலவும் பிரச்னைகளை அடுக்கினர்.
எழில் நகர் மற்றும் கண்ணகி நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேசுகையில், "எங்கள் குடியிருப்புகளில் 5 நாட்களாக கரண்ட் இல்லை. தண்ணீர் தேங்கியிருப்பதால் எலக்ட்ரிசன் கூட வயரில் கை வைக்க பயப்படுகிறார்கள்.
மழை பெய்தாலே சுவர் அப்படியே ஒழுக ஆரம்பித்துவிடும். நாங்களே செலவு செய்து கொத்தி பூசி என்னவெல்லாமோ செய்துவிட்டோம். ஆனாலும் மழையால் சுவர் அப்படியே ஊறிப் போய்விடுகிறது.

நாங்கள் வாழ்வதே பிரச்னையோடுதான் வாழ்கிறோம். எங்களால் அருகிலிருக்கும் கடைக்குக்கூட செல்ல முடியவில்லை. எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை. சிறுவர்கள் கூட போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள். எங்களின் பிள்ளைகளும் அப்படி ஆகிவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது.
அங்கே என்னென்னவோ நடக்கின்றன. வெளியே இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. ஒரு நாளைக்கு 2 பேருந்துகள்தான் வருகின்றன. அதுவும் நேரத்துக்கு வருவதில்லை. நாங்கள் ஆர்.ஏ. புரத்தில் வசித்து வந்தோம். எங்களை அப்படியே குப்பை மாதிரி எழில் நகரில் தூக்கி வீசிவிட்டார்கள்.
கண்ணகி நகரில் 23,000 குடியிருப்புகள் இருக்கின்றன. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லவே இல்லை . கிட்டத்தட்ட 10,000 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இருக்கிறது.
அந்தப் பக்கம் இருக்கும் ஐ.டி கம்பெனிகளுக்கு கக்கூஸ் கழுவத்தான் எங்களை அங்கே குடியமர்த்தியிருக்கிறார்கள். கண்ணகி நகரில் வேலை வாய்ப்பு முகாம் போடுகிறார்கள்.
என்ன வேலை வாய்ப்பு எனப் பார்த்தால் கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளி கக்கூஸ் கழுவும் வேலைக்குத்தான் ஆள் எடுக்கிறார்கள். ஏன் எங்கள் பகுதிகளில் வேறு வேலை செய்ய ஆட்களே இல்லையா?

ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் நாலு மாடி ஏறி வருகிறார்கள். அதன்பிறகு யாருமே எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை" என்றனர்.
சுனாமி நகரைச் சேர்ந்த பெண்கள் பேசுகையில், "சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்துதான் சுனாமி நகரில் வைத்தார்கள். வேலைக்குச் செல்வது படிப்பது சாப்பிடுவது என எல்லாமே எங்களுக்குப் பிரச்னைதான். எங்களுக்கு 1% நம்பிக்கை கூட இல்லை.
பிள்ளைகளுக்குப் படிக்க பள்ளி இல்லை. பள்ளி இருந்தால் டீச்சர் இல்லை. டீச்சர் இருந்தால் சத்துணவு இல்லை. அரிசி, முட்டை எல்லாம் யாருக்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. பிள்ளைகளை இங்கிருந்து சாந்தோமுக்கு பள்ளிக்கு அனுப்பும் சூழலில் இருக்கிறோம். 65 பேருந்துகள் ஓட வேண்டிய இடத்தில் 30 பேருந்துகள் கூட ஓடவில்லை" என்றனர் வேதனையுடன்.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசுகையில், "சென்னைக்குள் இருக்கும் குடியிருப்புகளில் 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் கட்டிக்கொடுத்த கட்டடங்கள் 10 ஆண்டுகள் கூட உறுதியோடு நிற்பதில்லை. கே.பி. பார்க்கில் நான்கே ஆண்டுகளில் சுவர் உடைந்து நொறுங்குகிறது.
மக்களின் அடிப்படை வசதிகளே கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், இந்த அரசு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் இருக்கிறார்கள். நாங்கள் முன்பு கூட மனநிம்மதியுடன் இருந்தோம் என மக்கள் குமுறுகிறார்கள்" என்றார்.

















