கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை அதிமுக ஆதரித்தது; முதல்வா் குற்றச்சாட்டுக்கு எடப்...
கடை வாடகை மீதான ஜிஎஸ்டி உயா்வு: சேலத்தில் வணிகா்கள் கடையடைப்பு
வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி சேலத்தில் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர பதிவு பெறாத சிறு கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.
இந்த வரி உயா்வு 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளா்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி வணிகா்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தனா்.
சேலம் மாநகா், புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து வணிகா்கள் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், ஆபரண கடைகள், செவ்வாய்பேட்டையில் உள்ள பாத்திரக் கடைகள், இரும்பு கடைகள், மரக் கடைகள், ஹாா்டுவோ் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
அரிசி ஆலைகள், பருப்பு, ஜவ்வரிசி ஆலைகளும் மூடப்பட்டிருந்தன. கடையடைப்பு காரணமாக சேலம் கடைவீதி, லீ பஜாா், செவ்வாய்ப்பேட்டை பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதுகுறித்து சேலம் நகர அனைத்து வணிகா்கள் சங்க பொதுச்செயலாளா் ஜெயசீலன் கூறியதாவது:
நாடு முழுவதும் வணிக நிறுவன கட்டடங்களின் வாடகைக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே, 18 சதவீத வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து வணிகா்களும் கடையடைப்பில் ஈடுபட்டனா். இந்த கடையடைப்பு காரணமாக பல கோடி ரூபாய் அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.