செய்திகள் :

கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? - 18

post image

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ, “நம்ம ரெண்டு பேரும் நம்ம செல்போன்களை மாற்றிக்கொள்வோம். உன்னுடைய போனை நான் பார்க்கிறேன்; என்னுடைய போனை நீ பார்” என்று திடீரெனக் கேட்டால், எந்தப் பதற்றமும் இல்லாமல் உங்கள் செல்போனைக் கொடுத்துவிடுவீர்களா?

அப்படிக் கொடுப்பதுதான் உண்மையான அன்புக்கும் நம்பிக்கைக்கும் அடையாளமா? கணவன் அல்லது மனைவி என்பதால், மற்றொருவரின் செல்போனைச் சோதித்துப் பார்க்க முழு உரிமை இருக்கிறதா?

ஒருவர் விருப்பத்துடன் தனது செல்போனை மற்றொருவரிடம் கொடுத்துப் பயன்படுத்த அனுமதிப்பது வேறு; அந்த அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களைப் பார்ப்பது அல்லது பதிவிறக்கம் செய்வது வேறு. இந்த இரண்டுக்கும் சட்டரீதியாக ஒரே அணுகுமுறை கிடையாது. ஒருவர் தன்னுடைய செல்போனைக் கொடுக்க மறுத்தால், அது சட்டப்படி தவறா?

திருமண உறவிலும் தனியுரிமை (Privacy) என்பது ஒருவருக்கு இருக்கிறதா? கணவன் – மனைவியின் செல்போனை அனுமதியின்றிச் சோதிப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

தெரிந்துகொள்வோம்.

திருமணமானாலும் தனியுரிமை உண்டு!

திருமணம் செய்துகொண்டதால் ஒருவருடைய தனிப்பட்ட உரிமைகள் அனைத்தும் மற்றொருவருக்குச் சென்றுவிடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகத் தனியுரிமையும் பாதுகாக்கப்படுகிறது.

இதில் செல்போனும் அடங்கும். ஒருவருடைய தனிப்பட்ட மெசேஜ்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், அழைப்புப் பதிவுகள் போன்றவற்றை அவருடைய அனுமதியின்றி ரகசியமாகப் பார்ப்பதற்கு, கணவன் அல்லது மனைவி என்ற உறவு மட்டும் உரிமை அளித்துவிடாது.

Ai created image

மேலும், ஒருவர் தனது செல்போனை மற்றொருவரிடம் கொடுக்க மறுப்பது மட்டுமே தவறான செயலாகவோ, திருமண உறவில் நம்பிக்கையின்மைக்கான ஆதாரமாகவோ கருதப்பட முடியாது.

நீதிமன்றம் சொல்வது என்ன?

இதுதொடர்பாக, 2024-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. விவாகரத்து வழக்கில், மனைவியின் செல்போன் மற்றும் சிம் கார்டு சிறிது நேரம் தனது வசம் இருந்தபோது, கணவர் அந்தச் செல்போனுக்கு வந்த OTP-ஐப் பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனமான Jio-வின் இணையதளம் வழியாக மனைவியின் அழைப்புப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கணவர் மனைவியின் அனுமதியின்றி ரகசியமாகப் பெற்ற அழைப்புப் பதிவுகள் அவரது தனியுரிமையை மீறுவதாகக் குறிப்பிட்டார். மேலும், அத்தகைய மின்னணு ஆதாரத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான சான்றிதழும் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். திருமண உறவிலும் தனியுரிமை உரிமை உண்டு என்றும், தனியுரிமையை மீறிப் பெறப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

ஒருவருடைய அனுமதியின்றி செல்போன் அல்லது கணினியில் உள்ள தகவல்களை அணுகுவது, தரவுகளைப் பதிவிறக்கம் செய்வது அல்லது நகலெடுப்பது போன்ற செயல்கள், சம்பவத்தின் தன்மையைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 43-ன் கீழ் வரக்கூடும்.

இத்தகைய செயல்கள் நேர்மையற்ற அல்லது மோசடியான நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால், பிரிவு 66-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். எனினும், அனுமதியின்றி ஒருமுறை செல்போனைப் பார்த்தது மட்டுமே தானாகவே இந்தப் பிரிவுகளின் கீழ் குற்றமாகிவிடாது; சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும்.

Ai created image

அதேபோல், ஒரு ஆண், ஒரு பெண்ணின் இணையப் பயன்பாடு, மின்னஞ்சல் அல்லது பிற மின்னணுத் தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ன் பிரிவு 78-ன் கீழ் 'Stalking' குற்றமாக அமையக்கூடும். இந்தப் பிரிவில் மின்னணுத் தகவல் தொடர்புகளைக் கண்காணிப்பது தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு முறையும் செல்போனைப் பார்ப்பது அல்லது ஒரு செய்தியைப் படிப்பது மட்டுமே தானாகவே Stalking குற்றமாகிவிடாது; சம்பவத்தின் தன்மை, கண்காணிப்பின் தன்மை மற்றும் சட்டத்தில் உள்ள விதிவிலக்குகளையும் கருத்தில் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

குடும்ப நீதிமன்றங்களில் டிஜிட்டல் ஆதாரங்கள் செல்லுபடியாகுமா?

விவாகரத்து அல்லது குடும்ப நல வழக்குகளில் கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் எதிராக வாட்ஸ்அப் சாட்கள், அழைப்புப் பதிவுகள் அல்லது ஆடியோ/வீடியோக்களைச் சமர்ப்பிப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பாரதிய சாக்‌ஷ்ய அதிநியம் (Bharatiya Sakshya Adhiniyam, 2023) அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 65B-ன் கீழ் உரிய டிஜிட்டல் சான்றிதழ் (Digital Certificate) பெறப்படாத மின்னணு ஆதாரங்களை நீதிமன்றங்கள் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், சட்டவிரோதமான முறையில் (உளவு பார்த்தோ அல்லது ரகசியமாகத் தரவுகளைத் திருடியோ) பெறப்படும் ஆதாரங்கள் அடிப்படைத் தனியுரிமை மீறலாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது

நம்பிக்கை என்பது கண்காணிப்பல்ல!

கணவன் – மனைவி இருவரும் விருப்பத்துடன் தங்களுடைய செல்போன்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. ஆனால், கட்டாயப்படுத்திப் பார்ப்பது, ரகசியமாக OTP பயன்படுத்துவது, உளவு செயலிகளைப் பொருத்துவது அல்லது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்வது போன்ற செயல்கள் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ஒருவர் செல்போனைப் பயன்படுத்த அனுமதி அளித்திருந்தாலும், அதனால் அதிலுள்ள அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பதிவிறக்கம் செய்யவோ, மற்றவர்களுடன் பகிரவோ அவருக்கு வரம்பற்ற அனுமதி கிடைத்துவிட்டதாகக் கருத முடியாது. அனுமதியின் வரம்பையும், தகவலின் தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருமண உறவில் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் அவசியம். அதற்காக ஒருவருடைய தனிப்பட்ட இடத்தையும் உரிமைகளையும் பறிக்க முடியாது. அன்பு என்பது ஒருவரைக் கண்காணிப்பதில் இல்லை; அவருடைய தனியுரிமையை மதிப்பதில்தான் இருக்கிறது.

`பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?' - நீதிபதி கேள்வி

நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2024ல் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நீதிமன்றம் ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் இம்முறை மட்டும் தீபமேற்ற அனுமதி - நீதிமன்ற நிபந்தனைகளின் முழு விவரம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ந... மேலும் பார்க்க

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' - உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வந்தன. இரு த... மேலும் பார்க்க

காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி; பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தள்ளுபடி செய்துள்ளது.மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணைய... மேலும் பார்க்க

உங்க பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு... முதலில் என்ன செய்ய வேண்டும்?சட்டம் சொல்வது என்ன? - 17

உங்கள் பெயர்… உங்கள் புகைப்படம்… உங்கள் நண்பர்கள்… ஆனால், அந்தக் கணக்கிலிருந்து வரும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் நீங்கள் இல்லை!இணையதளத்தில் அல்லது சமூக வலைத்தளத்தில், உங்கள் பெயரில் யாரோ போலிக் கணக்... மேலும் பார்க்க