"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலு...
'சச்சினையே கேள்வி கேட்டிருப்பார்கள்!' - சிராஜ் நீக்கத்தால் கொந்தளித்த கைஃப், கவாஸ்கர், ரவி சாஸ்திரி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நீக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய சிராஜ் இல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முடிவு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், தற்போதைய அணி நிர்வாகத்தின் தேர்வு முறையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சச்சினையே நீக்கியிருப்பார்கள்!
"இந்த நிர்வாகத்தில் இது சகஜமாகிவிட்டது," எனத் தனது யூடியூப் சேனலில் பேசிய கைஃப், அணி நிர்வாகத்தின் செயல்பாட்டை விளாசித் தள்ளியுள்ளார். "நீங்கள் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால் உங்கள் இடம் கேள்விக்குறியாகிவிடும். ஒருவேளை இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்திருந்தால்கூட, அவரும் சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றால், அவரையும் கேள்வி கேட்டிருப்பார்கள். ஒருவேளை அணியில் இருந்துகூட நீக்கியிருப்பார்கள்," என்று அவர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணி நிர்வாகம் சீனியாரிட்டிக்கு ஒருபோதும் மதிப்பளித்ததில்லை என்றும் கைஃப் குற்றம்சாட்டினார். "குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் எனப் பலரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். முகமது ஷமி கூட மீண்டும் அணிக்கு அழைக்கப்படவில்லை. 'நீங்கள் சீனியராக இருக்கலாம், ஆனால் இப்போது என்ன செய்தீர்கள்?' என்பதுதான் இவர்களின் கேள்வியாக இருக்கிறது. அதே நிலைதான் இப்போது சிராஜுக்கும் ஏற்பட்டுள்ளது," என்றார் கைஃப்.
சமீபத்திய ஃபார்ம்தான் காரணமா?
சிராஜின் சமீபத்திய ஃபார்ம் குறித்தும் கைஃப் பேசினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் சிராஜ் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "அவர்களின் நினைவாற்றல் மிகவும் குறுகியது. இலங்கையில் அவர் இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவரது வேகமும் குறைவாக இருந்தது. ஆனால் ஆசியக் கண்டத்தில், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாதான் விக்கெட் வீழ்த்தும் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருந்தனர். கொழும்பில் நடந்த போட்டியில் கூட ஜடேஜாவும், மனவ் சுதரும்தான் பெரும்பாலான ஓவர்களை வீசினர்," என சிராஜுக்கு ஆதரவாகப் பேசினார்.

கவாஸ்கர், ரவி சாஸ்திரியும் அதிருப்தி!
முகமது கைஃப் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரியும் சிராஜ் நீக்கப்பட்டது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அனுபவ வீரரான சிராஜை அணி நிர்வாகம் கருத்தில் எடுத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "வேகம், திறன் மற்றும் சீம் மூவ்மென்ட் தான் தேர்வுக்கு அடிப்படையாக இருந்தால், முகமது சிராஜ் எங்கே? அனுபவம், ஆக்ரோஷம் மற்றும் பந்துவீச்சில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் ஆகியவற்றுக்கு மதிப்பு இல்லையா? நிச்சயம் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்!" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், "இது ஆச்சரியமல்ல, திகைப்பூட்டுகிறது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் அவரை ஆட வைத்தபோதே, முதல் டெஸ்ட் போட்டிக்கு அவரைத் தயார்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவரை பிளேயிங் லெவனில் பார்க்காதது அதிர்ச்சியளிக்கிறது. சிராஜ் இந்திய அணியை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. அவரது பந்துவீச்சில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை," என்று குறிப்பிட்டார்.

















