``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO...
கந்த சஷ்டி விரதம்: கவசம் பாடினால் கவலையில்லை... 'திருச்செந்தூரின் கடலோரத்தில் - 5'
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பல ஆயிரம்பேர். ஆலயத்தின் சுற்றுப்பகுதியிலேயே தங்கியிருந்து தினமும் சமுத்திரத்தில் நீராடி அந்த ஷண்முகனைத் துதிப்பார்கள்.
அதிலும் கந்ததுக்கு உகந்தது கந்த சஷ்டிக் கவசம். பாலதேவராயர் சுவாமிகள் பாடி அருளிய அற்புதமான ஸ்தோத்திரம் அது. ஒரு நாளில் 36 முறை கந்த சஷ்டிக் கவசத்தை மனமுருகப் பாராயணம் செய்தால் சகல ஸித்திகளும் கிடைக்கும் என்பதை அவரே சொல்கிறார்.
கவசம் என்றால் என்ன?
கவசம் என்பது ஒரு நூல் மரபில் ஒன்று. போருக்குச் செல்லும் வீரர்கள் ஆயுதங்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அணிந்துகொள்ளும் காப்பும் கவசமே. அதே நோக்கம்தான் ஆன்மிகத்தில் உள்ள கவச நூல்களுக்கும் இருக்கிறது.
எந்தவிதமான பாதிப்புகளும் நமக்கு ஏற்படாமல் இருக்கவும், தெய்வத்தின் அருளால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் கவச நூல்கள் பாராயணம் செய்யப்படுகின்றன. தலை முதல் கால் வரை உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க வேண்டும், பத்துத் திசைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க வேண்டும், நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று அந்தந்த தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதே கவச நூல்களின் அடிப்படை இலக்கணம்.
கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய பாலதேவராய சுவாமிகளைப் பற்றிய தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. அவர் எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தார் என்பதில்கூட மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சிலர் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், சிலர் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.

அவர் பெங்களூரில் வாழ்ந்தார் என்ற குறிப்பு கிடைக்கிறது. அவருடைய பூர்வீகம் தொண்டை மண்டலப் பகுதி என்றும், பள்ளூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். வியாபார நிமித்தமாக பெங்களூருக்குச் சென்றவர் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் செவிவழிச் செய்திகளாகவே உள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கிடைக்கவில்லை.
ஆரம்பத்தில் அவருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அழைத்து வந்து தன்னுடன் தங்கவைத்து அவரிடம் தமிழ் கற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. தமிழ் கற்றுத் தேர்ந்த பிறகு, அவருக்குப் பொன்னும் பொருளும் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், உ.வே.சாமிநாதையர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பற்றி எழுதிய குறிப்புகளில் பாலதேவராய சுவாமிகள் அவருடைய மாணவராக இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை. இதுவும் அவருடைய வரலாற்றில் தெளிவுபடுத்தப்படாத ஒரு விஷயமாகவே உள்ளது.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
பாலதேவராய சுவாமிகள் ஆறு கந்த சஷ்டி கவசங்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் நாம் அனைவரும் மிகவும் பிரபலமாக அறிந்திருப்பது திருச்செந்தூர் கவசம். இதை அவர் இயற்றிய சூழல் குறித்து வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
சிலர் பழநியில் முருகப்பெருமானைத் தரிசித்தபோது, அங்கு தங்கியிருந்து நோய் குணமானவர்களைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டதாகவும், முருகப்பெருமான் கனவில் வந்து அருளியதால் கவசம் இயற்றியதாகவும் கூறுகின்றனர். 'சின்னக் குழந்தை சேவடி போற்றி' என்று கவசம் முடிவது இதற்குச் சான்றாகச் சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர், 'சிறகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்று அவர் பாடியிருப்பதால் சென்னிமலையில் இதை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இவற்றுக்கெல்லாம் உறுதியான ஆதாரங்கள் இல்லை. பொதுவாக அறியப்படும் செய்தி, திருச்செந்தூரில்தான் கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்டது என்பதாகும்.

பாலதேவராய சுவாமிகளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு மருத்துவ முறைகளையும், மந்திரம், அவுஷதம் போன்றவற்றையும் நாடியும் அந்த வலி குணமாகவில்லை. முருகப்பெருமானைச் சரணடைந்தால் அவர் நோயைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கையில் கோயில் கோயிலாகச் சென்றார். இறுதியில் நோய் குணமாகாததால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் திருச்செந்தூருக்கு வந்தார் என்று துர்கை சித்தர் எழுதிய 'கவசக் கொத்து' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு வந்த அவர், அங்கு ஆறு நாள்கள் தங்கியிருந்து கந்த சஷ்டி உற்சவத்தைப் பார்த்துவிட்டு உயிரை விடலாம் என்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆறு நாள்களிலும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தலா ஒரு கவசம் என ஆறு கவசங்களை இயற்றினார்.
ஆறு கவசங்களையும் எழுதி முடித்ததும் முருகப்பெருமானின் அருளால் அவருடைய வயிற்றுவலி குணமானது.
தன்னுடைய நோயைக் குணப்படுத்தி, தன்னைப் பாதுகாக்கும் இறைவன் இருக்கும்போது உலகியல் வாழ்க்கை தேவையில்லை என்று கருதி, காவி அணிந்து துறவறம் மேற்கொண்டார் என்றும் கூறுகிறது அந்த நூல்.
மந்திர ரகசியங்கள்
ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாகக் கவசங்களை இயற்றியிருந்தாலும், திருச்செந்தூரில் இயற்றப்பட்டது என்பதாலும், கந்த சஷ்டி காலத்தில் திருச்செந்தூர் கவசம் மிகவும் பிரபலமாக இருப்பதாலும், அதில் தனது பெயரைப் பதித்திருப்பதாலும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் அதிகம் அறியப்படுகிறது. மற்ற ஐந்து படைவீடுகளுக்கும் கவசங்கள் உள்ளன.
கந்த சஷ்டி கவசத்தை வெறுமனே வாய்விட்டுப் பாடினால் மட்டும் போதாது. மனம் ஒருமுகப்பட்டு, சிந்தை கலங்காமல் தியானிக்க வேண்டும் என்பதையே கவச வரிகள் உணர்த்துகின்றன.
கந்த சஷ்டி கவசம் மந்திரக் கர்ப்பமாக அமைந்துள்ளது. மூல மந்திரங்களை குருவிடம் உபதேசம் பெற்று ஜெபிப்பது ஒரு முறை. ஆனால், குருமுகமாக மந்திர உபதேசம் அல்லது தீட்சை பெறாதவர்களுக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மந்திரச் சொற்களை வெண்பாக்களுக்கு இடையே மறைத்து வைக்கும் வழக்கம் உள்ளது.
அதாவது, மந்திரச் சொற்கள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருந்தாலும் அவற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்.

கந்த சஷ்டி கவசத்தில், 'ஐயும் கிளியும் அடவுடன் சவ்வும்' போன்ற அட்சரங்கள் வருகின்றன. இவை பாலா திரியட்சரி என்று சொல்லப்படும் பாலா திரிபுரசுந்தரியின் மந்திரத்தைக் குறிக்கின்றன. அந்த மந்திரம் கவசத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 'வசர வனப வருக வருக' போன்ற சொற்களிலும் எழுத்துகள் மாறி மாறி வருவதைக் காணலாம். இது ஒரு பிரயோக விதி. உச்சாடனம், ஸ்தம்பனம், மாரணம், வித்வேஷணம் போன்ற பிரயோக விதிகளில் மந்திர அட்சரங்கள் மாறி வருவதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.
அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் பல சாஸ்திரக் கருத்துகளைப் பொதிந்து வைத்திருப்பதைப் போலவே, பாலதேவராய சுவாமிகளும் மந்திர சாஸ்திர நுட்பங்களை கந்த சஷ்டி கவசத்தின் பல இடங்களில் மறைத்து வைத்திருக்கிறார்.
கந்த சஷ்டி கவசத்தின் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறும், மந்திர சாஸ்திர நுட்பங்களும் உள்ளன.
கந்த சஷ்டி விரத காலத்தில் ஆறு நாள்களும் விரதம் இருப்பவர்கள், தினமும் இதைப் பாராயணம் செய்யலாம். ஆறு கவசங்களையும் தினமும் சொல்ல இயலாதவர்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படைவீட்டுக்குரிய கவசத்தைப் பாராயணம் செய்யலாம். அதுவும் சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
திருச்செந்தூர் அற்புதங்களைத் தொடர்ந்து அறிவோம்.


















