அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்...
கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?
மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில், இருவரும் மாறி மாறி மற்றவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினர். சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாகப் பேசும்போது, இருவரும் காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்கப்போவதாகவும் கூறினார்கள்.
இந்த நிலையில், சித்தராமையாவின் வார்த்தைகளால், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

சித்தராமையா பேச்சு
கடந்த வாரம், கர்நாடகா சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, "நானே கர்நாடகா முதலமைச்சராகத் தொடருவேன். காங்கிரஸ் மேலிடம் எனக்கு சாதகமாகவே உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் எனக்கு முதலமைச்சர் பதவி என்று எந்த ஒப்பந்தமும் முன்பு போடப்படவில்லை" என்று பேசியுள்ளார்.
மேலும், சித்தராமையா டெல்லி செல்ல உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன.
இந்த இரண்டும் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்?
இதையடுத்து டி.கே. சிவகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "இருவரையும் டெல்லிக்குத் தகுந்த நேரத்தில் அழைப்பதாக காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இருவரையும் ஒன்றாகத்தான் அழைப்பார்கள். அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம்" என்று கூறியுள்ளார்.
இதுவரை 'காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைக் கேட்பேன்' என்றிருந்த சித்தராமையா இப்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். டி.கே.சிவகுமாரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.















