'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் ...
`கலைக்கும் கலைஞர்களுக்குமான மேடை'- மக்கள் கொண்டாட்டத்தால் நிரம்பிய மார்கழியில் மக்களிசை சீசன் 6
‘கலை சமூகத்தின் கனவையும் நினைவையும் கையளிக்கக்கூடிய அற்புதம்’
தன் வாழ்வை கலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிசைக் கலைஞர்களை உரிய அங்கீகாரத்தோடு கொண்டாடக்கூடிய நிகழ்வாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி வருடந்தோறும் நடந்துவருகிறது. ஆறாவது வருடமாகச் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் டிசம்பர் 26,27,28, ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்த இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிசை கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா உட்பட பல்துறை ஆளுமைகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பறையிசை ஒலித்து நிகழ்ச்சியை உற்சாகமாக தொடக்கி வைத்தனர்.

முதல்நாள் நிகழ்வாக கர்ணன் பட புகழ் கிடாக்குழி மாரியம்மாளின் பாடல், இளையராஜா ஃபோக் வைப்ஸ் குழுவினரின் இளையராஜா டிரிபியூட், சூப்பர் சிங்கர் கழுத்து கார்த்திக்கின் பாடல், ஜிப்ளா மேளம் கலைக்குழுவினரின் மேளதாள இசையென முதல் நாள் நிகழ்வு அட்டகாசமாக இசைத் தாளத்திற்கு ஏற்ப அரங்கமே அதிர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கலைஞர்களுக்கான நினைவுப் பரிசை சிறப்பு விருந்தினர் வழங்கினர்.

இரண்டாம் நாள் முழுவதும் கானா கலைஞர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது. முதல் திருநங்கை கானா பாடகர் விமலா முதல் பெங்களூரு கானா கலைஞர் தேஜூ வரை 15ற்கும் மேற்பட்ட கானா கலைஞர்கள் கானா பாடல் பாடி அசத்தினர். இவர்களைத்தவிர ஆலுக்குறும்பர் பழங்குடியின கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகளை இசைத்து நடனமாடினர். இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. தெலங்கானா புகழ் பத்மஸ்ரீ குஸ்ஸாடி கனகராஜ் குழுவினரும் பட்டைய கிளம்பினர். அன்றைய நாளின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியாக ரேப் பாடகர் பால் டப்பாவின் பாடல் அமைந்தது.

இறுதிநாள் நிகழ்வு ரேப், பேண்ட், ஒப்பாரி என கலைக் கச்சேரி விருந்துக்காக காத்திருந்தது. அதைப்போலவே, டாயா மியூசிக் குழுவில் தொடங்கி சொல்லிசை சிஸ்டாஸ், பிளாக் பாய்ஸ், தம்மா தி பேண்ட் வரை எந்த சோர்வும் இல்லாமல் கலைஞர்கள் கொடுத்த உற்சாகத்திற்கு ஏற்ப பார்வையாளர்கள் அனைவரும் ஆடினார்கள். இந்த வருட 'மார்கழியில் மக்களிசை சீசன் 6' "மக்களிசை மாமணி " விருது மூத்த கலைஞர்கள் ராஜா ராணி ஆட்டக்கலைக் கலைஞர், ஒப்பாரி பாடகர் தருமம்மாளுக்கும், நாதஸ்வரக் கலைஞர் S. மூர்த்திக்கும் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த ஒப்பாரிக் கலைஞர்கள் அரங்கயே தன்வசமாக்கியிருந்தார்கள். கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து மட்டுமல்லாதது கேரளா, மும்பை, ஆந்திரபிரதேசம் என வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தது கூடுதல் சிறப்பாக இருந்தது. இறுதியில் நன்றியுரை வழங்கிய இயக்குநர் பா.ரஞ்சித் 'எல்லாரும் என்னுடைய பெயரை மட்டும் சொல்லுறாங்க. இதற்கு நான் மட்டும் காரணமல்ல. கலை மக்களுக்கானது, அதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறது நீலம் பண்பாட்டு மையத்தினுடையது' . என்று கூறினார்.

‘தனது சக மாந்தரைக் கற்பனைகள் நிரம்பிய ஓர் உலகத்திற்கு அழைத்துச் செல்வதுதான் கலைஞனின் செயல்பாடாகும். அங்கே, அவர்கள் தங்கள் உணர்ச்சிப் பெருக்குக்கு ஒரு வடிகால் பெறுவது மட்டுமன்றி, நிதர்சன வாழ்க்கையில் காணப்படும் யதார்த்தத்துடனான போராட்டத்தை எதிர்கொள்வதற்கான புதிய தெம்பையும் பெறுகின்றனர்.’ என கலையையும் கலைஞனையும் பற்றி ஜார்ஜ் தாம்சன் சொல்வதை இது போன்ற கலைநிகழ்வின் வழி நம்மால் உணர முடிகிறது.
படங்கள் : ராகுல். செ

















